நியூயார்க்: நிரந்தரமல்லாத உறுப்பினர் அந்தஸ்திற்காக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெறும் தேர்தலில் இந்தியாவுக்கு பெரிய வெற்றி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. வரும் 2021-22ம் ஆண்டில் உறுப்பினராக இருப்பதற்கான தேர்தல் இது.

மொத்தம் 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொது அவை, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் நிரந்தரமற்ற உறுப்பினர்கள், பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் உறுப்பினர்கள் ஆகியோரை தேர்வு செய்வதற்கான தேர்தல்களை நடத்துகிறது.

தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலவும் காரணத்தால், இந்த தேர்தல்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

15 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு சபையின் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகியுள்ளது. ஆசியா-பசிபிக் வகைப்பாட்டில், 2021-22 காலக்கட்டத்திற்கான நிரந்தரமற்ற உறுப்பினர் பொறுப்பை இந்தியா வகிக்கவுள்ளது.

ஏனெனில், ஆசியா-பசிபிக் பிராந்தியத்தின் 55 நாடுகளும் இந்தியாவின் தேர்வை ஆதரிக்கின்றன. இந்தக் குழுவில் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.