டில்லி,
மியா மிலியா இஸ்லாமியா கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருபவர் அயுப். 19வயதான அயுப் ரெயில் பெட்டியின்மேல் ஏறி, செல்பி எடுக்க முயன்ற உயர்அழுத்த மின் கம்பியில் பட்டு பரிதாபமாக உயிரிழந்தான்.

டில்லியில் உள்ள  ஹஸ்ரத் நிஜாமுதீன் ரெயில் நிலையத்தில் இந்த சோக சம்பவம் நடைபெற்றது.

இந்த சோக சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் கூறியதாவது,

கடந்த சனிக்கிழமை மாலை, பழைய டில்லி பகுதியை சேர்ந்த முகமது அயூப் என்பவர் தனது உறவினர் திருமணத்திற்கு சென்றுவிட்டு  நிஷாமுதீன் பகுதிக்கு வந்துள்ளார்.

விழா முடிந்ததும் அவரும்,  மற்ற உறவினர்களும்  மாலை 6,30 மணி அளவில் நிஷாமுதீன் ரெயில்நிலையம் அருகே  ரெயில் டிரக் வழியாக வந்து கொண்டி ருந்தனர். அங்கு சரக்கு ரெயில் ஒன்று நின்று கொண்டிருந்தது.

இதைகண்டதும், செல்பி எடுக்கும் மோகத்தால், அயுப் திடீரென ரெயிலின் கூரை மீது ஏறி செல்பி எடுக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக  மேலே செல்லும் உயர்அழுத்த மின் கம்பியில் அவரது கை பட்டதால், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையறிந்த உறவினர்கள் உடனடியாக ரெயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.  அயுப்பின் பெற்றோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

ரெயில்வே போலீசார் அயுப்பின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  ஆய்வுக்கு பின் நேற்று  அயுப்பின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவரது இறுதி சடங்குகள் நடைபெற்றது.

இவ்வாறு போலீசார் கூறினர்.

செல்பி மோகத்தால் மரணத்தை தழுவிய அயுப்புக்கு  ஒரு சகோதரரும், சகோதரி யும் உள்ளனர்.

ஏற்கனவே, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்   தெலுங்கானா வாரங்கல் மாவட்டத் தில்  உள்ள தர்மசாகர் அணையில் செல்பி எடுக்க முயன்ற கல்லூரி மாணவர்கள் அணைக்குள் தவறி விழுந்து மூழ்கி 5 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

செல்பி மோகத்தால் இந்தியாவில் ஏற்படும் இறப்புகள் அதிகரித்து வருகின்றன.

இதுகுறித்து,  அமெரிக்காவின் கார்னகி மெலன் பல்கலைக்கழகம் மற்றும் இந்திர பிரஸ்தா இன்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் இணைந்து  2016-ம் ஆண்டு நடத்திய ஆய்வின்படி செல்பியால் ஏற்படும் மரணத்தில், உலக நாடுகளில் இந்தியா வில்தான் அதிக அளவு செல்பி மரணம் நிகழ்வதாக குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே, தற்கொலை சாவில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. தற்போது, செல்பி மோகத்திலான  மரணத்திலும் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.