சென்னை: தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலுவின் வீடு, அலுவலகம், கல்லூரிகள் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்கள்  என 100க்கும் மேற்பட்ட இடங்களில்  இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறை  சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உடள்ளது.

பல்வேறு ஊழல் மற்றும் முறைகேடு புகார்களில் சிக்கியுள்ள திமுகவை சேர்ந்த அமைச்சர்கள், எம்பிக்கள் என்று முக்கிய பிரமுகர்கள் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டிஎம்கே பைல்ஸ்1, டிஎம்கே பைல்12  என்ற பெயரில் ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி இருந்தார். இதன் பின்னணியில் திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள்    வீடுகளில்  அடுத்தடுத்து வருமான வரித்துறை,  அமலாக்கத்துறை மூலம் ரெய்டு  நடத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே ஊழல் புகார் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் என பலரது வீடுகள் மற்றும் அலுவலகங்கள் மற்றும் மணல் குவாரிகள், மின்வாரிய முறைகேடு தொடர்பாக மின்துறை அலுவலகங்களில், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டுள்ளது. மேலும் பல அமைச்சர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் மீது உயர்நீதிமன்றம் தானாகவே வந்து வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த  தொடர் ரெய்டுகள், வழக்குகள்  காரணமாக திமுக தரப்பிற்கும் பிரஷர் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மத்திய அரசை கடுமை யாக சாடி வருகின்றனர்.

இந்த நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், திமுக  அமைச்சர் எ.வ வேலு வீட்டில் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனை காலை 6 மணி முதல் நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலையில் இருக்கும் அமைச்சருக்கு சொந்தமான இடங்கள், அவரது மகன்கள் கம்பன், குமரன் ஆகியோர் தொடர்புடைய இடங்கள் மற்றும் வீடு அமைந்துள்ள அருணை மருத்துவமனை வளாகம், அருணை பொறியியல் கல்லூரி, கம்பன் கலைக் கல்லூரி, கரண் கலை அறிவியல் கல்லூரி, அருனை கிரானைட்ஸ், வேலு சிபிஎஸ்இ பள்ளி, அருணை கன்ஸ்ட்ரக்ஷன் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் என  100 க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

மேலும், அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் உள்ள நிலையில், அவரின் சென்னை வீடு, மறறும் வேலுக்கு சொந்தமான தி.நகர், கீழ்ப்பாக்கம், வேப்பேரி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதுபோல கரூர் காந்திபுரத்தில் இயங்கி வரும் நிதி நிறுவனத்திலும் சோதன நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை ராமநாதபுரம்- நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மூன்று கார்களில் வந்துள்ள அதிகாரிகள் தற்போது சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு காவல் துறையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல அதேபகுதியில் பார்சன் என்ற அபார்ட்மெண்ட்டில் உள்ள மீனா ஜெயக்குமாரின் மகன் ஸ்ரீ ராமின் வீடு மற்றும் சிங்காநல்லூர் பகுதியில் திமுக பிரமுகரும், முன்னாள் கவுன்சிலருமான எஸ்.எம்.சாமி ஆகியோரின் வீடுகளிலும் இந்த சோதனை நடந்து வருகிறது.

மீனா ஜெயக்குமார் அமைச்சர் எ.வ.வேலுவின் உறவினர் என்ற முறையில் இந்த வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. இவரது கணவர் ஜெயக்குமார் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளர் என கூறப்பட்ட மீனா ஜெயக்குமாருக்கு, உட்கட்சி பூசலால் தேர்தலில் போட்டியிட கூட வாய்ப்பு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. திமுக பிரமுகர்கள் வீடுகளில் அடுத்தடுத்து நடந்து வரும் வருமான வரித்துறை சோதனைகள் அக்கட்சியினரிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலையில் உள்ள வேலுவுக்கு சொந்த இடங்களில்  சோதனைக்கு 2 பேருந்துகள் மற்றும் 3 கார்களில்   அதிகாலை வந்த 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள்  பல்வேறு குழுக்களாக பிரிந்து தற்போது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனை நடைபெறும் இடங்களில்  மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். எ.வ.வேலு வீடு அமைந்துள்ள கல்லூரி வளாகத்தில் மட்டும் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், பள்ளி, கல்லூரிகளுக்கு வரும்  வேலை ஆட்களை சோதனை செய்த பிறகே உள்ள அனுமதிக்கபட்டு வருகின்றனர். கல்லூரி, பள்ளி களுக்கு செல்லக்கூடிய மாணவர்களின் பேருந்துகள் சோதனைகு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்த ரெய்டு திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.