திருவனந்தபுரம்:

கேரளாவில் 10 ஆண்டில் 16 ஆயிரத்து 755 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளன.

 

நூறு சதவீத கல்வி உள்பட பல விஷயங்களில் கேரளா நாட்டிற்கே முன்னுதாரமாக விளங்குவது பெருமைக்குறிய விஷயம். ஆனால், இங்கு பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் அதிகரித்திருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக கேரள போலீசார் வெளியிட்டுள்ள தகவலில், ‘‘2007ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையிலான 10 வருடத்தில் பெண்களுக்கு எதிரான வழக்குகள் 1.32 லட்சம் பதிவாகியுள்ளது. இதில் பாலியல் பலாத்கார வழக்குகள் மட்டும் 16 ஆயிரத்து 755 ஆகும். இதில் பெண்கள் தொடர்புடையவை என 11 ஆயிரத்து 325 வழக்குகளும், குழந்தைகள் தொடர்புடையவை என 5 ஆயிரத்து 430 வழக்குகளும் உள்ளன.

இந்த காலகட்டத்தில் வழக்குகளின் எண்ணிக்கை மும்மடங்கு உயர்ந்துள்ளது. 2007ம் ஆண்டில் 500, 2008ம் ஆண்டில் 548, 2009ம் ஆண்டில் 554, 2010ம் ஆண்டில் 617, 2011ம் ஆண்டில் 1,132, 2012ம் ஆண்டில் 1,019, 2013ம் ஆண்டில் 1,221, 2014ம் ஆண்டில் 1,347, 2015ம் ஆண்டில் 1,256, 2016ம் ஆண்டில் 1,656, 2017ம் ஆண்டு செப்டம்பர் வரை 1,475 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் 11,001 பதிவாகியுள்ளது. அவற்றில் 3,407 பாலியல் வன்முறை, 147 கடத்தல், 9 வரதட்சணை மரணம், 2,452 கணவன் மற்றும் உறவினர்களால் துன்புறுத்தல் மற்றும் 3,222 பிற குற்றங்களாகும். பாலியல் பலாத்கார குற்றங்கள் இந்த ஆண்டு திருவனந்தபுரத்தில் நடந்துள்ளது. இங்கு 157, மலப்புரம் 136, பாலக்காடு 105 என பதிவாகியுள்ளது. 10 ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள் 16,624 பதிவாகியது.