வரதட்சணை கொடுமையால் தூக்கில் தொங்கிய பெண் – நெஞ்சை உருக்கும் தகவல். 

அத்திங்கள், கேரளா

ஒரு கிலோ தங்கம், ஒரு உல்லாச கார் கொடுத்தும் திருப்தியடையாத புகுந்த வீட்டின் வரதட்சணை கொடுமை தாளாமல் ஒரு 20 வயதுப் பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

வளைகுடா நாட்டில் வாழும் கேரள தொழிலதிபர் ஷாநவாஸ் மற்றும் சலீனாவின் செல்ல மகள் சல்சா.  பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்த இவர் பட்டப்படிப்பு படிக்கும் போதே பாதியில் படிப்பை நிறுத்தி  ரோஷன் என்னும் இளைஞருக்கு திருமணம் செய்து வைத்தனர்.  திருமணத்தின் போது வரதட்சணையாக 100 கிலோ தங்க நகைகளும், ஒரு இன்னோவா கிறிஸ்டோ வாகனமும், நிலமும்  ரோஷனின் தாயாரின் விருப்பப்படி வழங்கப்பட்டது.    அத்திங்களில் இதுவரை யாரும் கண்டிராத அளவுக்கு விமரிசையாக திருமணம் நடந்தது.

கழுத்து நிறைய நகைகளுடனும்,  இதயம் நிறைய கனவுகளுடனும் புகுந்த வீடு வந்த சல்சாவுக்கு அங்கு மகிழ்ச்சிக்கு பதில் அதிர்ச்சியே காத்திருந்தது.   கேட்டதெல்லாம் கொடுத்த பின்பும்  பேராசை கொண்ட ரோஷனுக்கும், ரோஷனின் தாயாருக்கும் மேலும் மேலும் சீதனம் தேவைப்பட்டது.    தினம் ஒரு சொல்லாடல் மூலம் இருவரும் சல்சாவின் மனதை நோகடித்தனர்.    திருமணமாகி மூன்றே மாதங்களான நிலையில், மனம் உடைந்த சல்சா தூக்கில் தொங்கி தன் வாழ்வை முடித்துக் கொண்டார்.

அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் தங்கள் மகள் மரணத்துக்கு ரோஷனின் குடும்பமே பொறுப்பு என அறிந்துக் கொண்டனர்.  சல்சாவின் சகோதரன் உடனடியாக போலிசின் உதவியை நாடினார்.  போலிசார் சல்சாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  பரிசோதனையில் அவர் தூக்குப் போட்டுக் கொண்டதால் மரணம் அடைந்தது தெரியவந்தது.   அதற்குள் ரோஷனும் அவருடைய தாயாரும் தலைமறைவு ஆகிவிட்டனர்.    தலைமறைவாக இருந்த போதே முன் ஜாமீன் வேண்டி ரோஷன் நீதிமன்றத்துக்கு மனு அளித்தார்.  அந்த மனு நிராகரிக்கப் பட்டதால் அவர் போலீசில் சரண் அடைந்தார்.   ரோஷனின் தாயார் எங்குள்ளார் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.   ரோஷனிடம் விசாரணை நடந்து வருகிறது.

கேரளாவைப் பொறுத்த வரை பணக்காரப் பெண் வீடாயினும் சரி, பணக்காரரல்லாத பெண் வீடாக இருந்தாலும்  சரி மாப்பிள்ளை வீட்டார் கேட்கும் பரிசினை அளித்தே ஆக வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது.   அது போலவே ஆடம்பரத் திருமணமும் இப்போது வழக்கமான ஒன்றாகி விட்டது.    எனவே, ஆடம்பரத் திருமணத்துக்கு பெருமளவில் வரி விதிப்பதன் மூலம் கட்டுப்படுத்த முடியும் எனும் எண்ணத்தில் கேரள சட்டசபையில் அதற்கான வேண்டுகோள் விடுக்கப்பட்டது.  முதல்வர் பினராயி விஜயன் அதை நிராகரித்து விட்டார்.

இது பற்றி, “இதற்கான சட்டம் தீட்டுவது முடியாத ஒரு காரியம்,  மக்கள் தாங்களாகவே வந்து இது போன்ற ஆடம்பர திருமணங்களை கைவிடவேண்டும்.   வசதி படைத்தவர்கள் இது போன்ற திருமணம் நடத்துவதால் மற்றவர்களையும் மாப்பிள்ளை வீட்டார் ஆடம்பரத் திருமணம் நடத்த வற்புறுத்துகின்றனர்.   இதனால் வசதியற்றோர் திருமணம் நடத்த பணமின்றி தவிக்கின்றனர்” என கூறினார்.

கடந்த 1961 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட வரதட்சணை ஒழிப்பு சட்டத்தின் படி வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் ஆகும்.    ஆனால் சட்டத்தில் ஒழிந்துள்ள வரதட்சணை உண்மையில் வேறு பல உருவில் இன்னும் நடமாடி வருகிறது என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்


English Summary
In kerala a girl commits suicide by hanging herself due to dowry problems