டில்லி

டந்த 2018-23 வரை ஐ ஐ எம், ஐ ஐ டி உள்ளிட்ட கல்வி நிலையங்களில் இருந்து 19000 க்கும் அதிகமான தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கல்வி பயில்வதை நிறுத்தி உள்ளனர்.

நாட்டில் ஐஐடி, ஐஐஎம், மத்திய பல்கலைக்கழகம் என உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயில மாணவர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.  இதற்காக நுழைவுத் தேர்வு, இட ஒதுக்கீடு என மாணவர்களுக்கு பல சலுகைகளும் தரப்படுகின்றன.   இங்குக் கல்வி பயில இடம் கிடைப்பது பல மாணவர்களுக்கு ஒரு கனவாக உள்ளது.  இந்நிலையில் இங்குக் கல்வி பயிலும் மாணவர்கள் குறித்து மாநிலங்களவையில் கேள்வி ஒன்று எழுப்பப்பட்டுள்ளது

இதற்கான பதிலை மத்திய கல்வித்துறை அமைச்சர் சுபாஸ் சர்க்கார் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ளார்.  அந்த பதிலில், “கடந்த 2018 முதல் 2023 வரையிலான கால கட்டத்தில் உயர் கல்வி நிறுவனங்களில் இருந்து தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட 19,256 மாணவர்கள் கல்வி கற்பதை நிறுத்தி உள்ளனர்

இவர்களில் மத்திய பல்கலைக்கழகங்களில் இருந்து 14,446 மாணவர்கள், ஐஐடியில் இருந்து  4,444 மாணவர்கள், மற்றும் ஐ ஐ எம் இல் இருந்து 366 மாணவர்கள் கல்வி கற்பதை நிறுத்தி உள்ளனர்.  இந்த மாணவர்களுக்கு வேறு நிறுவனங்களுக்கு மாற்றிக் கொள்ளவோ அல்லது வேறு துறைகளுக்கு மாறவோ வாய்ப்புக்கள் உள்ளன.

மேலும் அரசு சார்பில் இவர்களுக்குக் கல்விக் கட்டணம் குறைப்பு,  அதிக கல்வி நிலையங்கள் அமைத்தல், உதவித் தொகை,  குறிப்பாகத் தேசிய அளவிலான உதவித்தொகை ஆகிய சலுகைகளும் வழங்கப்பட்டன.  ஆயினும் மாணவர்கள் கல்வி நிறுத்தம் அதிக அளவில் உள்ளது மிகவும் கவலையை அளிக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.