“படிப்பறிவில்லாத மக்கள் நாட்டிற்கு பாரமாக இருக்கிறார்கள்” என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். சன்ஸாத் டி.வி. க்கு அளித்துள்ள பேட்டியில் பேசிய அவர், “அவர்களால் நல்ல குடிமக்களாக மாற முடியாது” என்று கூறினார்.

பிரதமர் மோடி அரசுப் பொறுப்பை ஏற்று 20 ஆண்டுகள் நிறைவடைந்தது குறித்து பெருமைப்பட பேசிய அமித்ஷா முன்னெப்போதும் கண்டிராத ஜனநாயகத்தை நாடு இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறது என்று பேசினார்.

2001 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 ம் தேதி குஜராத் மாநிலத்தின் முதல்வராக பதிவியேற்றுக்கொண்ட நரேந்திர மோடி, 2014 மே மாதம் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்கும் வரை அந்த பதவியில் இருந்தார்.

தேர்ந்தேடுக்கப்பட்ட அரசின் தலைமைப் பொறுப்பை ஏற்று 20 ஆண்டு நிறைவடைந்ததை ஐ.நா. வரை சென்று பிரதமர் பேசிய நிலையில், அவரது கட்சியினர் இந்த அதிசய நிகழ்வை கொண்டாடி வருகின்றனர்.

இதுகுறித்து பேசிய அமித்ஷா, பிரதமர் மோடி தலைமையில் நாடு இதற்கு முன் எப்போதும் அனுபவித்திராத சுதந்திரத்தை அனுபவித்து வருவதாகப் புகழாரம் சூட்டினார்.

மேலும், “படிப்பறிவில்லாத நபர் நாட்டிற்கு சுமை. அவருக்கு அரசியலமைப்பால் வழங்கப்பட்ட உரிமைகள் தெரியாது, அல்லது அவரிடமிருந்து எதிர்பார்க்கப்படும் கடமைகள் என்னவென்றும் தெரியாது. அத்தகைய நபர் எப்படி ஒரு நல்ல குடிமகனாக இருக்க முடியும்?”

“அதனால், படிப்பறிவு வழங்குவது மட்டுமே இதற்கான தீர்வாக இருக்க முடியும், குஜராத் மாநிலத்தின் கல்வியறிவு வளர்ச்சிக்காக பாடுபட்ட பிரதமர் மோடி இப்போது ஒட்டுமொத்த இந்திய மக்களின் கல்வி மேம்பாட்டுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்” என்று கூறினார்.

“பிரதமர் மோடி எதேச்சதிகாரியாக நடந்து கொண்டிருப்பதாகக் கூறுவது பதவி சுகத்துக்கு ஆசைப்படும் கட்சிகளின் வீண்பேச்சு” என்று தெரிவித்த அவர், “அரசாங்கத்தை வெறுமனே நடத்தாமல் நாட்டை மாற்றுவதற்கான அதிகாரத்துடன் மோடி செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்” என்றும் தெரிவித்தார்.

அமைச்சரவை கூட்டங்களில் அனைவரின் கருத்துக்கும் இடம் கொடுக்கக் கூடியவர், அனைவரின் ஆலோசனையுடனேயே திட்டங்களை நிறைவேற்றுபவர் என்று மோடி குறித்து தெரிவித்த அமித் ஷா, மக்கள் நலனுக்காக பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., பொருளாதார சீர்திருத்தம், ஊரடங்கு என்று கடுமையான முடிவுகளை எடுக்க தயங்க மாட்டார் என்றும் கூறினார்.

சன்ஸாத் டி.வி.க்கு அளித்த பேட்டியை மேற்கோள்காட்டி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு வெளியிட்டிருக்கும் செய்தியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது, இருந்தபோதும், பணமதிப்பிழப்பு, ஊரடங்கு உள்ளிட்ட முக்கிய முடிவுகளில் எந்தெந்த அமைச்சர்கள் கலந்து கொண்டார்கள் என்பது குறித்தோ, அவர்கள் கூறிய கருத்துக்கள் குறித்தோ, அல்லது பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சி குறித்தோ விரிவாக விவரித்ததாக அதில் கூறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.