15 அடி உயர சுவரை தாண்டியும், முள்வேலி கம்பிகளுக்கு இடையே லாவகமாக நுழைந்தும் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவது எப்படி என்ற களப்பயிற்சியுடன் கூடிய குறுக்குவழிகள் குறித்த பயிற்சி வகுப்புகள் குஜராத்தில் அமோகமாக நடைபெற்று வருவதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

மெக்ஸிகோ விசா ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட போலி பாஸ்போர்ட் மூலம் பயணம் செய்த வடக்கு குஜராத்தில் உள்ள மெஹஸனா மாவட்டத்தைச் சேர்ந்த மிதேஷ் வித்தல் படேல், துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் கைது செய்யப்பட்டார்.

பின்னர் தோகா வழியாக இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்ட அவரை 2021 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 ம் தேதி டெல்லி விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவது குறித்து குஜராத் மாநிலத்தின் பின்தங்கிய கிராமங்களில் நடைபெறும் பயிற்சிகள் குறித்து தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டிருக்கும் செய்தியில், எந்த வித தொடர்பும் இல்லாத குஜராத்தின் வடக்கு மாவட்ட கிராமங்களில் உள்ள பண்ணை வீடுகளில் 15 அடி உயர சுவர்களை ஏறி குதிப்பது மற்றும் முள்வேலிகள் வழியாக லாவகமாக நுழைந்து ஊடுருவது குறித்து களப்பயிற்சி நடைபெறுவதாக தகவல் வெளியிட்டுள்ளது.

2022 ஜனவரி மாதம் கனடா எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் ஊடுருவ முயன்ற குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பனியில் சிக்கி உயிரிழந்ததை அடுத்து மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவுக்குள் ஊடுருவதையே பலரும் விரும்புவதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்திற்கு முன்பிருந்தே இதுபோன்ற பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள போலீசார், மனிதர்களை வெளிநாடுகளுக்கு கடத்தும் இந்த கும்பல் பல்வேறு நாடுகளுக்கு இவர்களை அனுப்பி வைத்தபோதும் அமெரிக்காவுக்கு அனுப்பிவைப்பதிலேயே முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

காந்திநகரில் உள்ள உவர்சாத், மான்சா மற்றும் பாலியாட் மற்றும் மெஹஸனா மாவட்டத்தில் உள்ள விஜாப்பூர் ஆகிய இடங்களில் இதுபோன்ற பயிற்சி வகுப்புகள் செயல்பட்டு வருவதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய விரும்பும் வாடிக்கையாளர்களை இந்த பண்ணைகளில் உள்ள பயிற்சி மைய்யங்களுக்கு அழைத்து வரும் மோசடி ஏஜெண்டுகள் இவர்களுக்கு 15 நாள் முதல் மூன்று மாதம் வரை பயிற்சி அளிக்கின்றனர்.

இந்த பயிற்சியில் குழந்தைகள், முதுகுச் சுமை மற்றும் தங்கள் உடமைகளுடன் கரடுமுரடான பாதைகளில் நீண்ட தூரம் ஓடுவது மற்றும் உயரமான சுவர்களை ஏறி குதிப்பது முள்வேலிகளின் இடைவெளி வழியாக நுழைவது உள்ளிட்ட பயிற்சிகள் தரப்படுகிறது.

தவிர, உணவு மற்றும் தண்ணீர் இன்றி நீண்ட நேரம் பயணிப்பது, சாக்லேட்டுகள் மற்றும் மிட்டாய்களை மட்டுமே சாப்பிட்டு பசியை தீர்ப்பது உள்ளிட்ட பயிற்சிகள் தவிர குழந்தைகளுக்கு பால் பவுடர் மட்டுமே கொடுத்து அவர்களின் பசி போக்குவது உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

ஜனவரி மாதம் கனடாவில் நடைபெற்ற மரணம் குறித்த தகவல் வெளியானது முதல் காவல்துறையினர் மேற்கொண்ட தொடர் முயற்சிகளை அடுத்து பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்ட சில ஏஜெண்டுகளின் மொபைல் போனில் இருந்த பயிற்சி வகுப்புகள் குறித்த வீடியோ-க்களை கண்டு போலீசார் திடுக்கிட்டுள்ளனர்.

இந்த நிலையில் இதேபோன்ற வீடியோ செப்டம்பர் மாதம் அமெரிக்க ஊடகங்களில் வெளியானது அதில் மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவுக்குள் ஊடுருவ முயன்றவர்கள் குறித்த காட்சிகள் இடம்பெற்றிருந்தது.

இதனை அடுத்து குஜராத்தில் உள்ள பயிற்சி மைய்யங்களை அடையாளம் காணும் முயற்சி நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

10 ஆண்டுகளுக்கு முன்னரே இன்னும் 25 ஆண்டுகள் கழித்து இந்தியா காணப்போகும் வளர்ச்சியை கண்ட குஜராத் மாநிலத்தில் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவது தொடர்பான பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருவது குறித்த தகவல் வெளியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.