வெற்றியின் அளவுகோல் – வருமான வரி-5: பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

Must read

வெற்றியின் அளவுகோல் வருமான வரி!

5. ‘ரிடர்ன்’ நிரப்புவது எப்படி…?

‘எனக்கு இவ்வளவு வருமானம் வருது… அதுக்கு வரி எவ்வளவு ஆகும்..?

இதெல்லாம் கூட கண்டுபிடிச்சுடுவேன்…. ஆனா…? இந்த ‘ரிடர்ன்’ தாக்கல் செய்யத்தான் முடியலை…’

இப்படி அங்கலாய்ப்பவர்கள் ஏராளம்.

என்ன காரணம்..?

வருமான வரியை முறையாகச் செலுத்துகிற பலபேர், வருமான வரி ‘ரிடர்ன்’ எப்படி இருக்கும் என்று பார்த்தது கூட இல்லை. இதில்தான் என்று இல்லை… சட்டப் படியான எந்தவொரு நடவடிக்கையிலும் இதே நிலைதான் – காலம் காலமாகத் தொடர்ந்து கொண்டு வருகிறது.

பத்திரப் பதிவு அலுவலகத்துக்குச் சென்று கவனித்துப் பார்த்தால் தெரியும்.

பத்திரங்களில் கையெழுத்து இடும் உரிமையுள்ள பலரும், ‘தான் ஏன் கையெழுத்து இடுகிறோம்….?தன் கையொப்பம் மூலமாக யார் யாருக்கு என்னென்ன சட்ட விளைவுகள் அல்லது பின் விளைவுகள் ஏற்படும்…?

ஒருவேளை கையொப்பம் இடாமல் இருப்பதனால் யாருக்கு என்ன பாதிப்பு…?’ என்றெல்லாம் யோசித்துப் பார்ப்பதே இல்லை. இதையெல்லாம் யாரும் யாருக்கும் எடுத்துச் சொல்வதும் இல்லை!

(இப்படி ஒரு ‘கவலையற்ற வாழ்க்கை’ இந்தியாவில்தான் சாத்தியம்!!!)

முன்பொரு காலத்தில் படிக்காதவர்கள் எண்ணிக்கை மிக அதிகம். எடுத்துச் சொல்ல வேண்டி இருந்தது.

இப்போதுதான் அநேகமாக எல்லாருமே படித்தவ்ர்கள்தானே..? பிறகு ஏன்.. படிக்காமல் கையெழுத்திட வேண்டும்…?

எல்லாம் சோம்பேறித்தனம்தான். வேறு காரணமே இல்லை.

சட்டம் தொடர்பான எந்தத் தாளைக் கொடுத்தாலும், படிப்பதற்கு யாரும் விருப்பப் படுவது இல்லை.

‘நீங்க பார்த்துட்டீங்க இல்லை…? போதும்.’ என்பவர்கள்தாம் எல்லா மட்டத்திலும்.

மொபைல் போன் வாங்கினால் கூட அதோடு கூடவே, சில விதிமுறைகள் அடங்கிய ஒரு தாள் இருக்கும். நாம் எத்தனை பேர் அதை முழுமையாகப் படித்துப் பார்க்கிறோம்…? இதுதான் பிரசினையே.

சட்டங்கள் எல்லாம் சாமான்யர்களுக்குப் புரிகிற விதத்திலே எளிமையாக இருக்க வேண்டும் என்று, தொடர்ந்து சொல்லிக் கொண்டும் எழுதிக் கொண்டும் வருகிறோம். அதற்கு ஏற்றாற்போல் சாமான்யர்களும், சட்ட வழிமுறைகளில் சற்றேனும் ஆர்வம் காட்டினால் நன்றாக இருக்கும்.

சரி.. ‘ரிடர்ன்’ தாக்கலுக்கு வருவோம். இந்த ஆண்டில் புதிய ‘ரிடர்ன்’ படிவம் அறிமுகப் படுத்தப் பட்டு உள்ளது.

இது ஒரு பக்க படிவம். (single page return) ஏறத்தாழ ஒரு ‘மணி ஆர்டர்’ படிவம் போலத்தான் இதுவும். இதனை நிரப்புவதற்கு ஆழமான சட்ட அறிவோ மொழி அறிவோ தேவை இல்லை.

படிவத்தை நிரப்புவதற்கு முன்பாக சில விவரங்களைக் கையில் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுதல் நலம்.

என்னவெல்லாம் தேவைப்படும்…?

மிக முக்கியமாக நிரந்தரக் கணக்கு எண் Permanent Account Number (சுருக்கமாக – ‘PAN’) வேண்டும். 

இப்போதெல்லாம் ‘பான்’ பெறுவது மிக எளிது. ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தாலே போதும். அதுவும் அன்றி, ஆங்காங்கே பான் அட்டை வாங்கித் தருவதற்கு முகவர்கள் இருக்கிறார்கள். குறைந்த செலவுதான் ஆகும்.

வங்கிக் கணக்கு தொடங்க, ‘ரெயில்வே டிக்கட்’ முன்பதிவு செய்ய, பாஸ்போட்டுக்கு விண்ணப்பிக்க… என்று பல வகைகளில் ‘பான்’ உபயோகப்படும். ஆகவே, அனைவரும் தவறாமல் ‘பான்’ வாங்கி வைத்துக் கொள்ளுதல் நலம்.

கவனிக்கவும்: ‘பான்’ இருந்தாலே, ‘ரிடர்ன்’ தாக்கல் செய்துதான் ஆக வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. வருமானம் இருந்தால்தான் வரி செலுத்த வேண்டும்; ரிடர்ன் தாக்கல் செய்ய வேண்டும்.

சரி. இனி….

‘பான்’ அட்டையைப் பார்த்து, அதில் உள்ளபடி ரிடர்னில் எழுத வேண்டியது மிக அவசியம்.

ஏதேனும் சிறிய தவறு நேர்ந்தாலும் ‘ரிடர்ன்’ மொத்தமும் பிழை உள்ளதாகி விடலாம். அதாவது, அதனைக் கணினி ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்து விடலாம்.

பொதுத் தேர்வுகளில் பதிவு எண் எழுதுவதில் எத்தனை கவனம் தேவையோ அதே அளவு கவனம் இங்கும் தேவை.

நிரந்தரக் கணக்கு எண் (PAN) – இந்த வடிவில் இருக்கும்: ABCDE1234F. (மாதிரி)

ஆங்கில எழுத்துகள் ஐந்து; தொடர்ந்து நான்கு எண்கள்; நிறைவாக ஒரு ஆங்கில எழுத்து. எழுத்துகள் அனைத்தும் பெரிய அளவில் அதாவது capital lettersஆக இருக்கும். எண்களுக்கு முன்னதாக உள்ள, ஐந்தாவது எழுத்து, ‘பான்’ நபரின் பெயரில் உள்ள முதல் எழுத்துதான்.

ஒருவரின் பெயர் முருகன் என்றால், ஐந்தாவது எழுத்து ‘M’ ஆகத்தான் இருக்கும். ‘பான்’ பற்றிய பிற விவரங்களை நாம் இப்போது தெரிந்து கொள்ள வேண்டியது இல்லை.

ரிடர்னில், குறிப்பிட்ட சில, தனிநபர் விவரங்கள் (personal details) தர வேண்டி இருக்கலாம்.

பிறந்த தேதி, முகவரி, ஆதார் எண், வங்கிக் கணக்கு எண், தொலைபேசி எண் ஆகியனவாக இருக்கலாம்.

மிகையாக செலுத்தப் பட்ட வரித் தொகையைத் திருப்பிச் செலுத்துவதற்காக (refund) மட்டுமே, வங்கிக் கணக்கு விவரங்கள் கேட்கப் படுகின்றன.

ரிடர்ன் படிவத்தில் அன்றி, தனிப்பட்ட முறையில் மொபைல் அல்லது மின்னஞ்சல் மூலம், வங்கிக் கணக்கு விவரங்களை வரித்துறை கேட்பதே இல்லை. (முறையான ‘நோட்டிஸ்’ அல்லது ‘சம்மன்’ மூலம் கேட்கப் படுகிற விவரங்கள் தனி)

வேறு என்னென்ன விவரங்கள் தேவைப்படலாம்…?

வருமானத் தொகை, அதில் இருந்து நாம் கோரும் கழிவுகள் விலக்குகள், வரிக்கு உட்பட்ட வருமானத் தொகை, இதன் மீதான வரித் தொகை, இந்த வரியை செலுத்தியதற்கான சான்றுகள் முதலியன தேவை.

ஒருவேளை ‘டி’டி.எஸ்.’ (TDS) வழியே வரிப் பிடித்தம் செய்யப் பட்டு இருந்தால்,

அதற்கான சான்றுப் படிவம் 16 (Form16) தரப்பட்டு இருக்கும். எந்த அலுவலகத்தில், யார் வரிப் பிடித்தம் செய்தார்… எந்த வங்கியில் எந்தத் தேதியில் அத்தொகை செலுத்தப் பட்டது போன்ற விவரங்கள் படிவம் 16இல் இருக்கும்.

இவற்றையும் ரிடர்னில் தர வேண்டி இருக்கலாம்.

பொதுவாக வருமான வரி ரிடர்னுடன் எந்த சான்றையும் இணைக்க வேண்டியது இல்லை. இணைப்புகளற்ற (‘enclosure free’) தாக்கல் என்பதுதான் ஒரு சிறப்பு அம்சம். ஒருவேளை சான்று எதுவும் தேவையாய் இருப்பின், துறையில் இருந்து முறையாக எழுத்து வடிவில் கோரிக்கை வரும்.

அப்போது சமர்ப்பித்தால் போதுமானது.

சரி… தேவையான அத்தனை சான்றுகள், விவரங்கள், கணக்குகளும் தயாராக இருக்கின்றனவா…?

இனி ‘ரிடர்ன்’ ஒன்றை நிரப்பத் தொடங்குவோமா…?

– வளரும்…

More articles

Latest article