பெங்களூரு:

பெங்களூரு ஐஐஎம் மாணவர்களுக்கு நிர்வாகம் சார்பில் ஒரு இ மெயில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் தங்களது பெயரை இந்தி மொழியில் மொழியாக்கம் செய்து அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பட்ட சான்றிதழில் பெயர் அச்சடிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முதுகலை மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ‘‘வெளிநாட்டு நிறுவனங்களில் பணியில் சேரவும், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலவும் விண்ணப்பம் செய்யும் போது இந்தி மொழியை அவர்களால் புரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்படும்’’ என்றனர்.

இது குறித்து மேலும், அவர்கள் கூறுகையில், ‘‘எங்களது கோரிக்கைக்கு ஆதரவு குரல் எழுந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. சில எதிர் கருத்துகளும் தெரிவித்துள்ளனர். எனினும் இது மாதிரியான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்று ஐஐஎம் பெங்களூரு நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. அதனால் இந்த பிரச்னை எங்களுக்குள் பேசி தீர்க்கப்படும். இதற்காக போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை’’ என்று தெரிவித்தனர்.

முதுகலை மாணவர்களுக்கு மார்ச் மாத மத்தியில் பட்டமளிப்பு விழா நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.