சென்னை,
மோடிக்கு துணிச்சல் இருந்தால் மத்தியபிரதேசத்தை உலுக்கிய வியாபம் ஊழல் குறித்து விசாரணை நடத்தமுடியுமா? என தாக்கப்பட்ட ஆம்ஆத்மி நிர்வாகி கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும், மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், நிதின் கட்கரி வீடுகளில் சோதனை நடத்துவீர்களா? என்றும் கேட்டுள்ளார்.

கோஷம் போடும் ஆம்ஆத்மி நிர்வாகி

நேற்று சென்னை அண்ணாநகரில், தமிழக தலைமை செயலாளர் வீட்டில் வருமானவரித்துறையினர் அதிரடியாக ரெய்டு நடத்தினர். அப்போது அங்கும் இங்கும் அதிகாரிகள் பரபரப்புடன் ஓடிக்கொண்டு இருந்தனர்.
இதை கேள்விப்பட்ட  அப்பகுதியைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தலைமைச் செயலாளர் வீட்டுக் கதவைத் தட்டி, வருமானவரித்துறை சோதனை வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும். சோதனையின்போது என்னையும் சாட்சியாக வைக்க வேண்டும் என்று கூறி கோஷமிட்டார்.
இதைத்தொடர்ந்து ஆம்ஆத்மி கட்சி நிர்வாகி, செந்தில்குமாருக்கும், அங்கிருந்த சிலருக்கும் இடையை வாக்கு வாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து  அவர் கூறியதாவது:
நான் வருமானவரித்துறை ரெய்டுக்கு எதிரானவன் அல்ல. ஆனால், இதுபோன்ற ரெய்டுகள், பாரதியஜனதா கட்சி ஆளும் மாநிலங்களிலும் நடத்தப்பட வேண்டும். தமிழகத்தின் முதல்வரை மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.களும் அ.தி.மு.க.கட்சியும் தான் முடிவு செய்ய வேண்டும். பிரதமர் மோடி நிர்ணயம் செய்யக்கூடாது.
மேலும்,  இது ரெய்டு கிடையாது. மத்தியஅரசு மாநில அரசை மிரட்டும் ஒரு நடவடிக்கையாகும். நான் இங்கு ஒரு நபரால் தாக்கப்பட்டேன்.
தாக்குதலுக்கு ஆளான ஆம்ஆத்மி நிர்வாகி (மஞ்சள் சட்டை)

இப்போதும் கூறுகிறேன், ஆம்ஆத்மி கட்சியும், நானும் வருமானவரித்துறை சோதனைக்கு எதிரானவர்கள் கிடையாது. தமிழகத்தை தனக்கு பணிய வைக்கும் மோடியின் செயலைத்தான் எதிர்க்கிறோம்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசை மோடி மிரட்டி பணிய வைக்க முயற்சிக்கக் கூடாது. முதல்வராக யார் இருக்க வேண்டும் என்பதை அதிமுக கட்சி தீர்மானிக்கும்.
மோடிக்கு துணிச்சல் இருந்தால், பாரதிய ஜனதா கட்சி ஆளும், மத்தியப் பிரதேச மாநிலத்தை உலுக்கிய வியாபம் ஊழல் குறித்து விசாரணை நடத்தமுடியுமா?
நாட்டில் 14 மாநிலங்களில் பாரதியஜனதா கட்சியின் ஆட்சி நடக்கிறது. அங்கெல்லாம் ரெய்டு நடத்த துணிச்சல் இருக்கிறதா?
மத்திய அமைச்சர்கள் பொன் ராதாகிருஷ்ணன், நிதின்கட்கரி வீடுகளில் ரெய்டு நடத்த முடியுமா?
ரூ.2000 நோட்டுகள் வைத்து இருந்ததாக பிடிபட்ட அனைத்து பாரதியஜனதா கட்சி உறுப்பினர்கள் வீடுகளிலும் இதுபோல் ரெய்டு நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.