சென்னை,
மிழகத்தின் புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ் இன்று காலை சஸ்பெண்ட் செய்யப்பட்டதை தொடர்ந்து புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்து உள்ளது.
இவர், கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் நில நிர்வாகத்துறை ஆணையராக இருந்தார். தற்போது தமிழக தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிலேயே பல ஆண்டுகள் அனுபவம் படைத்தவர்கள், மூத்தவருக்குத்தான் தலைமைச் செயலாளர் பதவி தரப்பட வேண்டும் என்று விதிமுறை உள்ளது.
ஆனால், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள  ராமமோகன ராவ் விஷயத்தில் இந்த மரபு கடைபிடிக்கப்படவில்லை. ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணி வரிசையில் 19-வது இடத்தில் இருந்த ராமமோகன ராவுக்கு மற்ற 18 பேர்களை புறம் தள்ளி விட்டு தலைமைச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது.
கிரிஜா வைத்தியநாதன்
ராம் மோகன் ராவுக்கு  முன்பு  பட்டியலில் உள்ள 18 பேரில்  ஒருவருக்கு தலைமைச் செயலாளர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.  இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் சக்தி காந்ததாஸ். இவர் இப்போது மத்திய அரசுப் பணியில் இருக்கிறார்.
அவருக்கு அடுத்தது கிரிஜா வைத்தியநாதன்.  நில நிர்வாகத்துறையில் கூடுதல் தலைமைச் செயலாளர், கமிஷனராக பதவி வகித்து வந்தார்.
தமிழகத்தில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளில்  மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி கிரிஜாதான்.  இவர் எந்தவித சர்ச்சைக்கும் ஆளாகாத ஜெம் என்கிறார்கள். இவர் சென்னையைச் சேர்ந்தவர். 1981 பேட்ஜ் ஐ.ஏ.எஸ் அதிகாரி.
இவருக்குத்தான் தற்போது  தலைமைச் செயலாளர் பதவி கிடைத்துள்ளது.
இவர் ஓய்வு பெறுவதற்கு இன்னும் 3 ஆண்டுகள் இருக்கிறது.