சென்னை

மின் இணைப்பு கோரி விண்ணப்பத்தால் ஒரே நாளில் இணைப்பு அளிக்கப்படும் என தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது தஞ்சை மாவட்டத்துக்குச் சென்றுள்ளார்.,  அங்கு அவர் புதுக்குடி, செங்கிப்பட்டி, வல்லம், அற்புதம்மாள் புரம் ஆகிய பகுதிகளில் உள்ள மின் பகிர்வு நிலையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தி உள்ளார்.   அப்போது அமைச்சரைச் செய்தியாளர்கள் சந்தித்துள்ளனர்

செய்தியாளர்களிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி, ”தமிழகத்தில் ஒரு நாளைக்கு 56,000 டன் முதல் 60,000 டன் வரை நிலக்கரி தேவை என்பது உள்ளது.  நம்மிடம் நான்கு நாட்களுக்கு தேவையான கையிருப்பு உள்ளது, எனவே தற்போது நிலக்கரி தொடர்பான பிரச்சினைகள் இல்லை.

தமிழகத்தில் தேவையான அளவு மின் உற்பத்தி உள்ளது.  தமிழகத்துக்கு நாளொன்றுக்கு 4,320 திறன் தேவை இருப்பது.  கடந்த ஆட்சி காலத்தில், ஒரு நாளைக்கு 1,800 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது,  தற்போது 3,500 மெகவாட் திறன் அதிகரித்து உள்ளது.

பராமரிப்பு சிறப்பாகச் செய்யப்படுவதே இதற்குக் காரணம் ஆகும்.  வேறு சில மாநிலங்களில் பற்றாக்குறை இருக்கலாம், ஆகவே தமிழகத்தில் அந்த நிலை வரும் என்று யோசிக்க வேண்டாம். தமிழகத்தைப் பொறுத்தவரை அனைவருக்கும் சமமான சீரான மின் விநியோகம் வழங்கப்படுவதே அரசின் நோக்கமாகும்.

தற்போது தமிழக முதலமைச்சரின் தொலை நோக்கு பார்வையின்படி, தமிழகத்திற்கு வரக்கூடிய தொழிற்சாலைகள் இன்று விண்ணப்பித்தால், நாளை மின் இணைப்பு வழங்கப்படும் என்ற அளவிற்கு மின்சார துறையின் கட்டமைப்பு உள்ளது,” எனத் தெரிவித்துள்ளார்.