மூணாறு:  தொடரும் ஊரடங்கு உத்தரவால் மூணாறில் அறுவடை செய்யாமல் செடியிலே விட்டுள்ளதால் ஸ்ட்ராபெரி பழங்கள் அழுகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கேரள மாநிலம், இடுக்கியில் ஸ்ட்ராபெரி, கேரட் ஆகியவை முக்கிய விவசாயமாக இருக்கிறது. ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் ஸ்ட்ராபெரி, கேரட் அறுவடை செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

ஆனால் இப்போது கொரோனா வைரஸ் எதிரொலியாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் மூணாறில் அனைத்து சில்லறை கடைகளும் மூடப்பட்டுள்ளன. அதனால் அறுவடை செய்யப்பட்ட ஸ்ட்ராபெரி, கேரட்டை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.

மேலும் சுற்றுலாப்பயணிகள் வருகையும் இல்லாததால், சில விவசாயிகள் ஸ்ட்ராபெரி பழங்களை பறிக்காமல் செடியிலே விட்டு உள்ளனர். அதன் காரணமாக, அவை செடிகளிலேயே அழுகி வருகின்றன. இதேபோல் கேரட் விற்பனையாகாமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சிறந்த ஸ்ட்ராபெரி விவசாயி விருதை பெற்ற அருள்மணி கூறுகையில், ஊரடங்கு உத்தரவால் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு விற்பனை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் ஸ்ட்ராபெரி, கேரட் அழுகி வருகின்றன. பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதேநிலை தொடரும்பட்சத்தில் விவசாயத்தை நம்பி வாழ்க்கை நடத்தும் எங்களை போன்றவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும். எனவே அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் அளிக்க முன்வர வேண்டும் என்றார்.