சென்னை: தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,372 ஆக இருந்த நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை 1,477 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று மட்டும் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 46. மொத்தமாக குணம் பெற்றவர்களின் எண்ணிக்கை 411. உயிரிழப்பு 15 ஆக உயர்ந்துள்ளது.  இன்று அதிகபட்சமாக சென்னையில் ஒரேநாளில் 50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

வீட்டுக் கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 21,381 ஆகும். மேலும், 20 பேர் அரசுக் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களில் 28 நாள்கள் கண்காணிப்பு முடித்தவர்கள் 85,253. தமிழகத்தில் 21 அரசு ஆய்வகங்கள், 10 தனியார் ஆய்வகங்கள் என 31 ஆய்வகங்கள் உள்ளன.

இதுவரை 40,876 கொரோனா தொற்று மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 5,840 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்றைக்கு புதிதாக 105 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று முதுநிலை மருத்துவர்கள் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. சென்னையில் 10ம் வகுப்பு மாணவர், தஞ்சையில் இன்று ஒரே நாளில் 10 பேர் என கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர்.

கோவையில் இன்று  24 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கோவையில் பிறந்து 2 நாட்களே ஆன குழந்தை பாதிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் இன்று 2 பேருக்கு என ஆக மொத்தம் 19 ஆக அதிகரித்துள்ளது.

3 மருத்துவர்கள், 2 பத்திரிகையாளர்கள், 2 காவல்துறையினர் என இன்று மட்டும் 7 அத்தியாவசிய பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, குறிப்பிடத்தக்கது.