சென்னை

கீல்வாதத்தைக் குணப்படுத்தும் மலிவான மருந்து ஒன்றை கொரோனா சிகிச்சைக்கு மருத்துவ சோதனை செய்யாமல் இந்திய மருத்துவ ஆய்வுக் குழு காலம் கடத்தி வருகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மரணம் அடைவதற்கு முக்கிய காரணம் வெள்ளை அணுக்கள் பெருமளவில் அழிந்து நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதாகும்.  இதை ஆங்கிலத்தில் சைடோகின் ஸ்டார்ம் என அழைக்கின்றனர்.   கொரோனா நோயாளிகளுக்கு இதற்காக அளிக்கப்படும் மருந்தின் விலை ரூ.60000 ஆகும்.   இதனால் பலருக்கு இந்த மருந்து கிடைப்பதில்லை.

கீல்வாதத்தைக் குணப்படுத்தும் இண்டோமெட்டாசின் என்னும் மருந்து இதே சிகிச்சைக்கு பயன்படுத்தாப்டுகிறது.  இந்த மருந்தின் விலை ரூ.5 மட்டுமே ஆகும்.  எனவே இந்த மருந்தை கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தச் சோதனை நடத்துமாறு சென்னையைச் சேர்ந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ராஜன் ரவிச்சந்திரன் இந்திய மருத்துவ ஆய்வுக் குழுவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராஜன் ரவிச்சந்திரன் கடந்த மாதம் 29 ஆம் தேதி அனுப்பிய இந்த கோரிக்கையை அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டு மருத்துவ ஆய்வுக் குழுக்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.  இங்கிலாந்து ஆய்வுக் குழு இந்த மருந்தைப் பரிசோதிக்குமாறு இந்தியக் குழுவுக்குக் கடிதம் அனுப்பி உள்ளது.  ஆனால் இதுவரை இந்தியக் குழு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்தியக் குழுவின் இயக்குநர் பலராம் பார்கவ, “எங்களுக்கு இதுவரை இது போல் கோரிக்கைகள் வந்துள்ளன.   அவற்றை நாங்கள் எங்கள் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்துறை, உயிரியல் தொழில்நுட்பம், உள்ளிட்ட துறைகளின் மூலம் ஒன்றன் பின் ஒன்றாக ஆய்வு செய்து வருகிறோம்.” என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் நடந்த முதல் கட்ட சோதனைகளில் இந்த மருந்து 60 நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டதில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை விடச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது.  புரூக்லின் மருத்துவமனை மருத்துவர் ஜோனதன் லெய்போவிட்ஸ் இந்த சோதனைகள் இதுவரை நல்ல முடிவுகளை அளித்துள்ளன.  மேலும் சோதனைகள் நடத்தப்பட உள்ளன எனத் தெரிவித்துள்ளார்.