லடாக்கில் படைகளை குவிக்கும் சீனா…! முப்படைகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை

Must read

டெல்லி: லடாக்கில் சீனப்படைகள் நடமாட்டம் காரணமாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், முப்படை தலைமை தளபதியுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார்.
அருணாச்சல பிரதேசத்தை தொடர்ந்து லடாக் மற்றும் சிக்கிம் ஆகிய பகுதிகளிலும் இந்திய, சீன எல்லை பிரச்சனையால் பதட்டம் நிலவி வருகிறது. வரையறுக்கப்பட்ட எல்லையை தாண்டி, இந்தியாவின் சில பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடுகிறது.
அப்பகுதிகளில் ராணுவ நடமாட்டத்தையும் சீனா அதிகரித்துள்ளது. குறிப்பாக சிக்கிமில் கடந்த மாதம் இருநாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பின் இந்த விவகாரம் மேலும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த 5ம் தேதி லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி பகுதியில் இந்திய, சீன ராணுவ வீரர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. அதிகாரிகள் பேச்சு வார்த்தைக்கு பின்னர் மோதல் முடிவுக்கு வந்தது. கல்வான் பள்ளத்தாக்கிலும் இதே நிலைமை தான் காணப்படுகிறது.
இந்த இரு பகுதியில்  சீன படைகள் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளன. தற்காலிக கூடாரங்களை அமைத்து, சாலை போடும் பணிகளை தொடங்கி உள்ளனர். இந்தியாவும் அங்கு படைகளை குவித்து வருகிறது. சீன ராணுவத்தை விட அதிக எண்ணிக்கையில் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கிழக்கு லடாக் எல்லையின் பல்வேறு பகுதிகளில் இரு நாடுகளும் படைகளைக் குவித்து வருவதால் எல்லைகளில் பதற்றம் அதிகரித்து உள்ளது. இந் நிலையில், முப்படைத் தளபதிகள், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார்.

More articles

Latest article