மும்பை: 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்பதற்கு பதிலாக, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும் என்ற ஐசிசி அமைப்பின் யோசனையை உறுப்பு நாடுகள் நிராகரித்து விட்டன.

முழுமையான உறுப்பினர் அந்தஸ்து பெற்ற நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டத்தில், ஐசிசி அமைப்பால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது. ஆனால், இந்த யோசனை முற்றிலும் நிராகரிக்கப்பட்டது.

அதாவது, ஆண்டுக்கு ஒருமுறையேனும் ஒரு சர்வதேச போட்டித் தொடரை நடத்திவிட வேண்டுமென்பது ஐசிசி அமைப்பின் ஆவல். அதனடிப்படையிலேயே இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.

ஆனால், 50 ஓவர் போட்டிகளுக்கு எந்த கூடுதல் முக்கியத்துவமும் கிடைத்துவிடாது என்றும், தற்போது இங்கிலாந்தில் நடந்துவரும் போட்டித் தொடரே பல விமர்சனங்களை சந்தித்து வருவதால், இந்த யோசனையை அனைத்து உறுப்பு நாடுகளும் நிராகரித்துவிட்டன.

டி-20 போட்டிகளுக்கே, உலகளவில் அதிக வரவேற்பு இருப்பதால், அதுதொடர்பாக கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதிகளவில் டி-20 போட்டித் தொடர்களை நடத்துமாறு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், 50 ஓவர் உலகக்கோப்பை, மகளிர் உலகக்கோப்பை மற்றும் டி-20 உலகக்கோப்பை ஆகிய சர்வதேச தொடர்களை ஐசிசி நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.