லண்டன்: வங்கதேச அணியின் ஷாகிப் அல் ஹசன் யுவ்ராஜ் சிங்கின் உலகக்கோப்பை சாதனையை சமன் செய்ததோடு, மற்றொரு சாதனைக்கும் உரியவராக பரிமாணம் பெற்றிருக்கிறார்.

ஒரே போட்டியில் 50 ரன்களுக்கும் மேலாக எடுத்து, 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றியது யுவ்ராஜ் சிங் செய்த சாதனை. கடந்த 2011ம் ஆண்டு உலகக்கோப்பையில் அயர்லாந்து அணிக்கு எதிராக இந்த சாதனையை செய்திருந்தார் யுவ்ராஜ் சிங்.

அந்த சாதனையை, ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது சமன் செய்துவிட்டார் ஷாகிப். இவர் 51 ரன்கள் எடுத்ததோடு, 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதுமட்டுமின்றி, மற்றொரு சாதனையையும் செய்துள்ளார் ஷாகிப்.

ஒரே உலகக்கோப்பை தொடரில், 400 ரன்களுக்கும் மேலாக எடுத்து, மொத்தம் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய சாதனையை செய்துள்ளார் ஷாகிப். இந்த உலகக்கோப்பை போட்டியில், இதுவரையான நிலவரப்படி, அதிக ரன்கள் எடுத்தவராக இருக்கிறார் ஷாகிப். இவரது கணக்கில், 6 இன்னிங்ஸ்களில் சேர்த்து 476 ரன்கள் உள்ளன.