லண்டன்: புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடந்துவரும் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியில், ஆஸ்திரேலியா 64 ரன்கள் வித்தியாசத்தில் தனது பரம கிரிக்கெட் எதிரியான இங்கிலாந்தை வீழ்த்தியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச முடிவு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் ஃபின்ச் 100 ரன்களை தன் பங்காக சேர்த்துக் கொடுத்தார். டேவிட் வார்னர் 53 ரன்களை எடுத்தார்.

அந்த அணியின் பிற பேட்ஸ்மென்கள் யாரும் அரைசதம் தொடவில்லை. அலெக்ஸ் கேரியும், ஸ்மித்தும் தங்களுக்குள் எந்தப் போட்டியும் இல்லாமல் தலா 38 ரன்களை எடுத்தனர். முடிவில், 7 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்களை ‍சேர்த்தது ஆஸ்திரேலியா.

இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். மற்ற பந்து வீச்சாளர்கள் பெரிய தாக்கம் செலுத்தவில்லை என்றபோதும், ஆஸ்திரேலிய அணியை 300 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது குறிப்பிடத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது.

பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கத்திலிருந்தே தடுமாறியது. ஜேம்ஸ் வின்ஸ் டக் அவுட் ஆனார். பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட் 8 ரன்கள் மட்டுமே எடுத்துக் கொடுத்தார்.

அந்த அணியின் பென் ஸ்டோக்ஸ் முடிந்தவரை போராடி 89 ரன்களை அடித்தார். பேர்ஸ்டோ 27 ரன்களையும், ஜாஸ் பட்லர் 25 ரன்களையும் அடித்தனர். கிறிஸ் வோக்ஸ் 26 ரன்களை சேர்த்தார். அடில் ரஷீத் இறுதிவரை போராடி 25 ரன்களை அடித்தார். முடிவில் இங்கிலாந்து அணி 221 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இத்தோல்வியின் மூலம் இங்கிலாந்தின் அரையிறுதி வாய்ப்பு சவாலானதாக மாறியுள்ளது.

ஆஸ்திரேலியா தரப்பில் ஜேஸன் பெஹ்ரன்டோர்ஃப் அதிரடியாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை சாய்த்தார். மிட்செல் ஸ்டார்க் தன் பங்கிற்கு 4 விக்கெட்டுகளை எடுத்தார்.