டில்லி

தேசத் தலைவர்களை ஏற்றிச் செல்லும் விமானங்களுக்கு எந்த நாட்டு அரசும் தடை விதிக்கக் கூடாது என சர்வதேச விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி விதி எண் 370 ஐ விலக்கி காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது.   மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் காஷ்மீர் மாநிலத்தில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

இந்தியாவின் நடவடிக்கைகளுக்குப் பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.   காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக ஐநா பாதுகாப்புக் குழு உள்ளிட்ட பல அமைப்புகளிலும் புகார் அளித்துள்ளது.    அத்துடன் இந்தியாவுக்கு வரும் மற்றும் இந்தியாவில் இருந்து செல்லும் அனைத்து விமானங்களும் பாகிஸ்தான் வான் வழியில் பறக்க பாகிஸ்தான் தடை விதித்தது.

இந்நிலையில் சவுதி அரேபியாவுக்குச் செல்லும் பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான் வழியில்  பறந்து செல்ல இந்தியா அனுமதி கோரியது.   பொதுவாக முக்கிய பிரமுகர்களின் விமானம் பறக்க உலகில் உள்ள அனைத்து நாடுகளும் தடை விதிப்பது கிடையாது என்பதால் இவ்வாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது.  ஆனால் பாகிஸ்தான் அனுமதி வழங்க மறுத்து விட்டது.

இந்த விவகாரம் சர்வதேச விமானப் போக்குவரத்து ஆணையத்திடம் இந்திய அரசு எடுத்துச் சென்றது    ஆணையம், “தேசத் தலைவர்கள் பயணம் செய்யும் விமானம்  அரசு விமானம் எனக் கருதப்படுகிறது.    வான் வழி மூடல் என்பது பயணிகள் விமானத்துக்கு மட்டுமே பொருந்தும்.   அரசு மற்றும் ராணுவ விமானத்துக்கு இது பொருந்தாது.  எனவே மோடி பயணம் செய்யும் விமானத்துக்கு வான் வழி தடை விதிக்கக்கூடாது” என அறிவித்துள்ளது.