அகில இந்திய காங்கிரஸ் தலைமையின் அழைப்பை அடுத்து இன்று டெல்லி புறப்பட்ட கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

“எங்களுடையது ஒன்றுபட்ட வீடு, நாங்கள் மொத்தம் 135 எம்.எல்.ஏ.க்கள். அதை உடைக்க நான் எதையும் செய்ய மாட்டேன். அவர்களுக்கு பிடிக்குமா பிடிக்காதா என்று தெரியவில்லை. நான் பொறுப்புள்ள தலைவர், முதுகில் குத்த மாட்டேன், பிளாக்மெயில் செய்ய மாட்டேன்’ என ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பெங்களூரு சதாசிவநகரில் உள்ள தனது இல்லம் அருகே செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவக்குமார், “அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் டெல்லிக்கு வரச் சொன்னார் அதனால் நான் செல்கிறேன்” என கேபிசிசி தலைவர் டிகே சிவக்குமார் தெரிவித்தார்.

“காங்கிரஸ் எனது கடவுள், காங்கிரஸ் எனது கோயில், காங்கிரஸ் எனக்கு தாய் போன்றது” என்று உணர்ச்சிகரமாக கூறிய அவர் “குழந்தைகளுக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று கடவுளுக்கும் தாய்க்கும் தெரியும்” என்றும் தெரிவித்தார்.

காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் தேர்தல் தொடர்பான முக்கியக் கூட்டம் டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள சிவக்குமார் டெல்லி சென்றார். நேற்று டெல்லிக்கு செல்ல இருந்த நிலையில், உடல்நிலை சரியில்லாததை காரணம் காட்டி டி.கே. சிவக்குமார் நேற்று டெல்லி செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் பதவிக்கு முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும், மாநில தலைவர் டி.கே.சிவக்குமாருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், இன்று நடைபெறும் மூத்த தலைவர்கள் கூட்டத்தில் இந்த குழப்பம் முடிவுக்கு வர வாய்ப்புள்ளது.