திருப்பூர் :

னது கணவர் சங்கர் ஆணவ கொலை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு முக்கியமானது என்ற கவுசல்யா,  குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை வரவேற்பதாக கொலை செய்யப்பட்ட சங்கர் மனைவி கவுசல்யா கூறி உள்ளார்.

மேலும் விடுதலையான தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் உள்பட 3 பேர் விடுதலை செய்யப் பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன் என்றும், சங்கர் சிந்திய ரத்தத்துக்கு நீதி கிடைத்துள்ளது என்று கவுசல்யா கூறினார்.

பொதுமக்களின் கண்முன்னே கொடூரமாக  சங்கர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு திருப்பூர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், கவுசல்யாவின் தந்தை மற்றும் கூலிப்படையை சேர்ந்த ஜெகதீசன், மணிகண்டன், செல்வகுமார், கலை தமிழ்வாணன், மதன் ஆகிய 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனையும் ஸ்டீபன் தன்ராஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் மணிகண்டன் என்ற மற்றொருவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

தீர்ப்பு குறித்து கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவு கவுசல்யா கூறியதாவது,

சங்கர் சிந்திய ரத்தத்திற்கு இந்த தீர்ப்பின் மூலம்  நீதி கிடைத்து விட்டது. என் சங்கர் சிந்திய ரத்தத்துக்கு நீதி கிடைக்க ஒன்றே முக்கால் ஆண்டுகள் காத்திருந்தேன். அந்தவகையில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பை வரவேற்கிறேன்.

அதுவும், கொலை வழக்கு ஒன்றில் தீர்ப்பு வரும்வரை குற்றவாளிகளை நீதிமன்ற காவலிலேயே வைத்திருப்பது அரிதினும் அரிது. பெரும்பாலான குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையான தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

தூக்குத்தண்டனை குறித்த எனது கருத்து வேறாக இருந்தாலும் சாதி ஆணவக் கொலைகளுக்கு இதுவே சரியான தீர்ப்பாக இருக்கும்.

சங்கர் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் தண்டனை எந்த வகை யிலும் குறைக்கப்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு இரட்டை தூக்கு, இரட்டை ஆயுள் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த தீர்ப்பு சங்கர் கொலை வழக்கிற்கான தீர்ப்பு மட்டுமல்ல. சாதி வெறியர்கள் இனிமேல் கவுரவ கொலை செய்ய பயப்படுகிற வகையில், இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. இந்த வழக்கில் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பினால், நீதித்துறையின் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில் அன்னலட்சுமி, பாண்டித்துரை, பிரசன்ன குமார் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் உயர்நீதிமன்றத்திற்கு சென்று முறையிட்டு அவர்களுக்கும் உரிய தண்டனை பெற்றுத்தரும் வரை எனது போராட்டம் ஓயாது.

அதேநேரத்தில் தண்டனை பெற்றவர்கள், மேல்முறையீடு செய்தால், அதற்கு எதிராக மேல்முறை யீடு செய்து அவர்களின் தண்டனையை உறுதி செய்யும் எனது சட்டப் போராட்டம் தொடரும், இந்த போராட்டத்தில் ஒருபோதும் நான் சலைக்க மாட்டேன், சட்டப் போராட்டத்திலும், களப் போராட்டத்திலும் ஒருபோதும் ஓய மாட்டேன்  என கவுசல்யா கூறினார்.

இன்று நீதிமன்றத்தில் ஏற்பட்ட அசாதரண சூழ்நிலையை கருத்தில்கொண்டு, எனக்கும், சங்கர் குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும் கூறினார்.

மேலும் சங்கர் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்த அரசியல் கட்சியினருக்கும், சமூக செயற்பாட்டாளர்களுக்கும், மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி.

இவ்வாறு கவுசல்யா கூறினார்.