தேனி:

தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தில்  உள்ள தனக்குச் சொந்தமான பிரச்சினைக்குரிய கிணற்றை கிராம மக்களுக்கு இலவசமாக வழங்க தயார் என்று ஒபிஎஸ் அறிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் லெட்சுமிபுரம் அருகே கோம்பை அடி வாரம் பகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மற்றும் ஓபிஎஸ்ஸின் நண்பர் சுப்புராஜ் ஆகியோருக்கு சொந்தமான தோட்டத்தில் 200 அடி ஆழ கிணறு உள்ளது.

இதன் அருகில் லெட்சுமிபுரம் ஊராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்ய பயன்படுத்தப்படும் பொதுக் கிணறும் இருக்கிறது.

இந்நிலையில் ஓபிஎஸ் தரப்பினர் கிணற்றை  ஆழப்படுத்தியதால், ஊராட்சியின் குடிநீர் ஆதாரமாக இருந்த கிணற்றில் தண்ணீர் வற்றி விட்டதாக பொது மக்கள் குற்றம்சாட்டி போராடி வருகின்றனர்.

ஆனால், பொதுமக்களின் கோரிக்கை குறித்து ஓ.பி.எஸ்சோ, அவரது தரப்பினரோ எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.

இதையடுத்து கடந்த வாரம், ஓ.பி.எஸ்ஸுக்குச் சொந்தமான தோட்டத்தை அந்த பகுதி  மக்கள் முற்றுகையிட்டனர். அக் கிணறை மூட வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.

அப்போதும் ஓ.பி.எஸ். இது குறித்து ஏதும் கருத்து தெரிவிக்கவில்லை.

இதையத்து கிராமத்தில் தற்போது நிலவி வரும்  குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஓபிஎஸ் தரப்பினரின் கிணற்றை ஊராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு  பெரியகுளம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், அதிகாரிகள் ஒரு தரப்பினருக்கு ஆதரவாக பேசுவதாகக் கூறி கிராம மக்கள் பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறினர்.

இந்நிலையில், இருதரப் பினருக்கும் இடையே மீண்டும் தேனி பகுதியில் உள்ள  என்ஆர்டி நகரில் உள்ள தியாகராஜன் என்பவரது வீட் டில்  பேச்சுவார்த்தை நடைபெற்றது.

சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஓபிஎஸ் சார்பாக, அவரது தம்பி ஓ.ராஜா, வழக்கறிஞர் சந்திரசேகரன் பங்கேற்றனர். கிராம மக்கள் சார்பில் முன்னாள் ஊராட்சித் தலைவர் ஜெயபாலன், கிராம கமிட்டி தலைவர் கார்த்திகேயன் உட்பட 6 பேர் கலந்து கொண்டனர்.

இரு தரப்பினர் அவரவர் தரப்பு வாதங்களை முன்வைத்து பேசினர். இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து, கிராம கமிட்டி தலைவர் கார்த்தி கேயன் கூறும்போது,  எங்கள் தரப்பில் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். அதேபோன்று, அவர்கள் தரப்பிலும் சில கருத்துகளை தெரிவித்தனர்.

பேச்சுவார்த்தையின்போது விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து கிராம மக்களிடம் தெரிவித்து, அவர்களிடம் கருத்து கேட்ட பின்பு இன்றும் மீண்டும் பேச்சு நடத்தவுள்ளோம் என்று கூறினார்.

இந்தநிலையில் இன்றைய பேச்சுவார்த்தையின்போது, பொதுமக்களுக்காக தனது கிணற்றை இலவசமாக வழங்கத் தயாராக இருப்பதாக ஓபிஎஸ் தரப்பில் கூறப்பட்டதாக தகவல் வந்துள்ளது.