நமக்கு அமைந்த்து போல வேறு யாருக்கும் அண்டை நாடு அமையக்கூடாது: ராஜ்நாத் சிங் சூசகம்

Must read

நமக்கு அமைந்ததைப் போன்றதொரு அண்டை நாடு வேறு யாருக்கும் அமைந்து விடக்கூடாது என தாம் இறைவனை வேண்டிக் கொள்வதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்தியா உடனான தூதரகம் மற்றும் வர்த்தகம் ரீதியிலான தொடர்புகளை முறித்துக் கொள்வதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இவற்றை மறுபரிசீலனை செய்யக் கோரி இந்திய அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ”தனது அண்டை நாட்டை மாற்றிக் கொள்ளும் சலுகை எந்த ஒரு நாட்டுக்கும் கிடையாது என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியிருக்கிறார். அதை நான் நினைவுக்கூற கடமைப்பட்டுள்ளேன். நமது அண்டை நாடு தான் நமக்கு இருக்கும் மிகப் பெரிய கவலை. நண்பர்களை நாம் மாற்றிக் கொள்ளலாம். ஆனால் அருகில் வசிப்பவர்களை நாம் மாற்றிக் கொள்ள முடியாது. நமக்கு அமைந்ததை போன்றதொரு அண்டை நாடு, வேறு யாருக்கும் அமைந்து விடக்கூடாது என்று நான் இப்போதும் இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

அண்டை நாடான பாகிஸ்தான் குறித்து ராஜ்நாத் சிங் பேசியிருக்கும் இக்கருத்து, பாகிஸ்தான் உடனான உறவுகளை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அந்நாட்டு அரசு தரப்பில் இதுவரை பதில் ஏதும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article