திருவனந்தபுரம்: பிரதமர் மோடி அடிக்கடி கேரளாவுக்கு வருவதால்,  மக்களவை தேர்தலில் வெற்றிபெறலாம் என கனவு காண்கிறார் என குற்றம் சாட்டிய காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், மக்களவைத் தேர்தலில் கேரளாவில் ஒரு இடத்தில் கூட பாஜக வெல்ல வாய்ப்பில்லை என்று  தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் உள்ள விண்வெளியா ஆய்வு நிலையத்தை ஆய்வு செய்த பிரதமர் மோடி, அங்கு ககன்யான் திட்டத்தில் விண்ணுக்கு செல்ல உள்ள 4 விண்வெளி வீரர்களை அறிமுகம்  செய்து வைத்தார். பின்னர், கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது “மக்களவைத் தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவதே பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியின் முழக்கம். கேரள மாநிலத்தை மத்திய அரசு ஒருபோதும் புறக்கணிக்காது. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு இணையாக கேரளா மாநில அரசு உள்ளது. பாஜக எந்தவொரு மாநிலத்தையும் வாக்கு வங்கி கண்ணோட்டத்தில் பார்த்ததில்லை. கேரளாவில் பாஜக கட்சி ஆட்சியில் இல்லை என்றாலும், கேரளாவின் வளர்ச்சிக்கு நாள்தோறும் உழைத்து வருகிறோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள   காங்கிரஸ் எம்பி சசிதரூர், “மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே, கடந்த 2 மாதங்களில் 3 முறை கேரளாவிற்கு மோடி வந்துள்ளார். இதன் மூலம் அவர் தென்னிந்திய மாநிலங்களில் வெற்றி பெறலாம் என்று கனவு காண்கிறார். பாஜகவுக்கு பல சவால்கள் இந்த தேர்தலில் காத்திருக்கிறது. கேரளாவில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றிப் பெறாது. பாஜக, இந்துத்துவ அமைப்புகளின் செயல்பாடுகள், கேரளாவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை” என்று விமர்சித்துள்ளார்.