தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள அமீர்பேட் மெட்ரோ ரயில் நிலைய சூப்பர் மார்க்கெட்டில் ராபின் சசியஸ் என்பவர் இம்மாதம் 9ம் தேதி ரோஸ்டட் ஆல்மண்ட் மற்றும் ப்ரூட்ஸ் & நட்ஸ் ஆகிய இரண்டு வகை சாக்கலேட் வாங்கியுள்ளார்.

ஆந்திராவின் ஸ்ரீசிட்டி உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு இடங்களில் தொழிற்சாலை அமைத்து தயாரிக்கப்பட்டுவரும் உலகின் முன்னணி நிறுவன தயாரிப்பான கேட்பரி ‘டெய்ரி மில்க்’ சாக்கலேட் கவரை பிரித்து பார்த்தபோது அதில் புழு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதுகுறித்து சமூக வலைத்தளம் மூலம் அந்நிறுவன அதிகாரிகளுக்கு தெரிவித்த ராபின் சசியஸ் தெலுங்கானா மாநில உணவு சோதனைக் கூடத்திற்கும் ஆய்வுக்காக அனுப்பிவைத்தார்.

‘டெய்ரி மில்க்’ சாக்லேட்டை சோதனைக்கூடத்தில் மூன்று நாட்கள் பல்வேறு ஆய்வுகள் செய்து பரிசோதனை செய்த அதிகாரிகள் ரோஸ்டட் ஆல்மண்ட் வகை சாக்கலேட்டில் புழு இருந்ததை உறுதிசெய்துள்ளனர்.

இது தொடர்பாக ‘டெய்ரி மில்க்’ சாக்லேட் தயாரிப்பு நிறுவனமான மொண்டெல்ஸ் (முன்னர் கேட்பரி) நிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தயாரிப்பு தொகுப்பில் விற்பனையாகாமல் உள்ள அனைத்து சாக்கலேட்டுகளையும் சந்தையில் இருந்து திரும்பப் பெற வலியுறுத்தப்பட்டுள்ளது.