’’இந்தி சினிமாவுக்கு நான் அந்நியம் தான்’’ மனம் திறந்த ஸ்ருதி ஹாசன்

ஸ்ருதி ஹாசன் நடித்துள்ள ‘’யாரா’ என்ற இந்தி சினிமா, தியேட்டர்கள் முடங்கி கிடப்பதால் ஓ.டி.டி. தளத்தில் ரிலீஸ் ஆகிறது.

இது குறித்து பேட்டி அளித்துள்ள ஸ்ருதி ‘’ ‘யாரா’’ படத்தின் ’ஷுட்டிங்’ முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகி விட்டது. இந்த படம் ரிலீஸ் ஆகும் என்ற நம்பிக்கையே எனக்கு இல்லாமல் இருந்தது. ஒரு வழியாக இணைய தளத்தில் ரிலீஸ் ஆவது மகிழ்ச்சியே’’ என்றவர், அந்த படத்தில் தனது கேரக்டர் குறித்து தெரிவித்த தகவல் இது:

‘’உறவுகள்,துரோகம், நம்பிக்கை மற்றும் நட்பு வட்டாரம் குறித்து பேசும் படம் இது. சுகன்யா என்ற வேடத்தில் நடிக்கிறேன். 1970 களில் தொடங்கி 90 களில் முடிவடையும் கதை. இளம்பெண்ணாகவும், வயதான தோற்றத்திலும் நடித்துள்ளேன்.’

’’கமலஹாசனும்,  சரிகா ஹாசனும் என் பெற்றோர் என்பது, சினிமா கதவுகள் எனக்கு திறப்பதற்கு துணையாக இருந்தது என்பது உண்மை. மற்றபடி, எனது சொந்த முயற்சியால் தான் 11 ஆண்டுகள் சினிமாவில் தாக்கு பிடித்து நிற்கிறேன். எனக்கு சான்ஸ் வாங்கி தாருங்கள் என்றோ, என்னை வளர்த்து விடுங்கள் என்றோ ஒருபோதும் அவர்களிடம் கேட்டது இல்லை’’ என்ற ஸ்ருதியிடம்’’ இந்தி சினிமாவில் மீண்டும் ‘உள்ளூர் ஆள்.. வெளியூர் ஆள்’’ என்ற நெருப்பு புகைவது குறித்து கேட்கப்பட்டது.

‘’இந்த கேள்விக்கு நான் பொய்யான பதிலை சொல்லப்போவதில்லை. இந்தி சினிமாவுக்கு நான் அந்நியப்பட்டவளாகவே உணர்கிறேன். பலமுறை, நான், இந்தி சினிமாவுக்கு வெளியாள் என்பதை உணர்ந்துள்ளேன்’’ என்று உலகநாயகனின் மகள் தெளிவாக சொல்கிறார்.

– பா.பாரதி.