சட்லெஜ் நதிக்கரையில் கண்டெடுக்கப்பட்ட உடல் பாகம் சைதை துரைசாமியின் மகனுடையதா என்பதை உறுதிசெய்ய டி.என்.ஏ. ஆய்வு.

தமிழக முன்னாள் அமைச்சரும் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி கடந்த சில தினங்களுக்கு முன் தனது நண்பர்களுடன் ஹிமாச்சல் பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்றார்.

கடந்த ஞாயிறன்று (4-2-2024) மாலை கஷங் நாலா பகுதியில் உள்ள சட்லஜ் நதிக்கரையின் அருகே அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் வெற்றி உள்பட 3 பேர் காரில் பயணம் செய்தனர்.

அப்போது இவர்களுடைய கார் விபத்துக்குள்ளாகி சட்லஜ் நதியில் விழுந்தது. ஆற்றில் விழுந்த காரில் இருந்து ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்டார். இந்த காரில் பயணம் செய்த வெற்றியின் நண்பர் திருப்பூரை சேர்ந்த கோபிநாத் என்பவர் காயங்களுடன் மீட்கப்பட்டார்.

ஆனால் இவர்களுடன் காரில் பயணம் செய்த சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியை மட்டும் காணவில்லை. இதனையடுத்து சென்னை காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

மாயமான வெற்றி துரைசாமியை தேடும் பணியை ஹிமாச்சல பிரதேச காவல்துறையினர் தீவிரப்படுத்திய நிலையில் சட்லெஜ் நதிக்கரை ஓரமாக இருந்த பாறையில் கிடைத்த மனித மூளை ஒன்றை காவல்துறையினர் டி.என்.ஏ. ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.

சட்லெஜ் நதிக்கரையில் கண்டெடுக்கப்பட்ட உடல் பாகம் சைதை துரைசாமியின் மகனுடையதா ? என்ற கோணத்தில் ஹிமாச்சல பிரதேச போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனது தந்தை சைதை துரைசாமியுடன் சேர்ந்து மனிதநேயம் ஐஏஎஸ் அகாடமியை நிர்வகித்து வரும் 45 வயதான வெற்றி துரைசாமிக்கு கடந்த 2012ம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையில் திருமணம் நடைபெற்றது. ஐ.ஏ.எஸ். அகாடமி தவிர சினிமா துறையிலும் நாட்டமுள்ள வெற்றி துரைசாமி 2021ல் வெளிவந்த ‘என்றாவது ஒரு நாள்’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.