டெல்லி :

டெல்லி ஆனந்த் விஹார் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் இன்று ஜார்கண்ட், உ.பி., பீகார் உள்ளிட்ட வடமாநிலத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முண்டியடித்த காட்சி நெஞ்சை பதறவைப்பதாக உள்ளது.

 

உலகையே கடந்த 2019 டிசம்பர் தொடங்கி அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் 25-மார்ச்-2020 முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் மோடி அறிவித்தார்.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட எல்லைகளும் சீலிடப்பட்டது, ரயில்கள் இல்லாமல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தவித்துக்கொண்டிருந்த வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் சென்னையின் பலபகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் முகாம் அமைத்து தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நாட்டின் தலைநகர் டெல்லியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்லமுடியாமல் சரியான போக்குவரத்தின்றி தவித்துவருகின்றனர், அண்டை மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் கடந்த மூன்று நாட்களாக, குடும்பம் குடும்பமாக மூட்டை முடிச்சுகளுடன் பல நூறு கிலோமீட்டர்கள் நடந்தே செல்லும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இன்று டெல்லியில் இருந்து ஜார்கண்ட், உ.பி., பீகார் உள்ளிட்ட வடமாநிலத்தை சேர்ந்த பல்வேறு பகுதிகளுக்கு குறைந்த எண்ணிக்கையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்த பேருந்துகளில் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல டெல்லியில் புறநகர் பகுதிகளில் இருந்து பலர் 40 கி.மீ. வரை நடந்து வந்து பேருந்துக்காக காத்திருந்தனர்.

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் இருக்க ஊரடங்கு மற்றும் சமூக விலகல் குறித்து பேசிவரும் வேலையில் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து எதிர்காலம் என்னவென்று தெரியாமல் பட்டினியால் சாவதைவிட தங்கள் சொந்தஊருக்கு செல்ல குவிந்த இந்த மக்கள் கூட்டத்தை பார்க்கும் போது வேதனையாகவும் அதேசமயம் திகிலாகவும் உள்ளது.