சென்னை: தமிழகத்தில் கொரோனா எதிரொலியாக 43537 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்பில் இருக்கின்றனர்.

நாடு முழுவதும் 944 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் 67 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் ஏற்பட்ட 20 மரணங்கள் மக்கள் இடையே ஒருவித பயத்தையும், பீதியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இந் நிலையில் தமிழகத்தில் எத்தனை பேர் கொரோனா அறிகுறிகளுடன் உள்ளனர், தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் வெளியாகி உள்ளன.

அதன்படி விமான நிலையங்களில் 209284 பயணிகள் சோதனைக்கு ஆளாகினர். அவர்களில் வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் 43,537 பேர் இருக்கின்றனர். தனிமைப்படுத்தப்பட்டவர்களில் 112 பேர் கொரோனா அறிகுறியற்ற பயணிகள் ஆவர்.

மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தலின் கீழ் உள்ளவர்கள் எண்ணிக்கை 277 ஆகும். 1,500 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. 1,393 பேருக்கு நோய் இல்லை என்று தெரிய வந்துள்ளது. 42 பேர் சோதனை முடிவுகள் பாசிட்டிவாக இருக்கின்றன. 65 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாக வில்லை.

இந்த புள்ளிவிவரங்களின்படி, தனிமைப்படுத்துதலில் உள்ள 43537 பேரில், சென்னையில் தான் அதிகபட்சம் 4523 பேர் தனிமைப்படுத்துதலில் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் 2780 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

3வது இடத்தில் திருச்சியில் 2622 பேர் தனிமைப்படுத்துதலில் இருக்கின்றனர். சிவகங்கையில் 2424 பேர் தனிமையில் உள்ளனர். தஞ்சையில் 2348, புதுக்கோட்டையில் 2168, நாகையில் 2120, நெல்லையில் 2110 பேர் தனிமைப்படுத்துதலில் இருக்கின்றனர்.

குறைந்த பட்சமாக ராணிப்பேட்டையில் 91 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். மொத்தம் உள்ள 37 மாவட்டங்களில் 42 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.