க்னி வெயிலை நினைத்தாலே  நமது உடல் எரியத் தொடங்குகிறது… இருந்தாலும் இன்றைய நவீன இயந்திர யுகத்தில் வெயில், மழை பார்க்காமல் ஒவ்வொருவரும் தங்களது பணிகளை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கிறோம்…

தமிழகத்தில் நாளை முதல் (மே 4ந்தேதி( அக்னி வெயில் தொடங்குகிறது.  21 நாட்கள் மக்களை வாட்டி வதைக்கும் அக்னி நட்சத்திர நாட்களின் முதல்  7 நாட்களில் வெயிலின் தாக்கம் பயங்கரமாக சுட்டெரிக்கும்.

இந்த அக்னி நட்சத்திரம் எனப்படும் கடுமையான வெயிலின் தாக்கத்தில் இருந்து நமது உடலை பாதுகாத்துக்கொள்வது எப்படி என்பது குறித்து பிரபல சித்த மருத்துவர் டாக்டர் மாலதி எழிலரசி  எம்.டி. பத்திரிகை.காம் வாசகர்களுக்காக பிரத்யேகமாக சில ஆலோசனைகளை வழங்கி உள்ளார்.

கோடைகாலத்தில் வெப்பம் அதிகமாக இருப்பதால் உடல் சூடும்அதிகமாக இருக்கும். இதனால் வியர்வை அதிகமாக வெளியேறி உடலில் நீர்ச்சத்தின் அளவு குறைந்து விடும். எனவே நாம் உண்ணும் உணவானது உடலின் நீர்ச்சத்தை குறைக்காதவைகளாகவும், உடல் சூட்டை சமநிலை யில் வைக்க கூடியதாகவும் இருக்க வேண்டும்.

கோடை வெயிலின் தாக்கத்தால்  சருமம் எளிதில் வறண்டுபோய் விடும். வெயிலின் தாக்கம் தாங்காமல் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படும். குறிப்பாக எண்ணைப் பசையான உடம்பு என்றால் முகத்தில் பருக்கள் பாடாய்ப்படுத்தும்.

இதுபோன்ற சரும பாதிப்புகள் தவிர்க்கப்பட வேண்டும். மேலும் கோடை வெயிலில் நாக்கு மட்டுமல்ல தோல் வறட்சியும் ஏற்படும்.  கோடை காலத்தில் பாத வெடிப்பு அதிகமாக ஏற்படும் இதுபோன்ற பாதிப்புகளை தவிர்க்க  நமது உணவுமுறைகள், பழக்க வழக்கங்களை  சற்றே மாற்றுவது அவசியமாகிறது.. அதற்கான ஆலோசனைகளே வாசகர்களுக்கு வழங்கப்படுகிறது…

கோடை வெயிலில் இருந்து  நமது உடலை பாதுகாப்பதில் முதன்மையானது எண்ணெய் குளியல். கோடைகாலத்தில் வாரம் ஒரு முறையாவது தலை மற்றும் உடல் முழுவதும் நல்லெண்ணெய்  தடவி வெதுவெதுப்பான நீரில் தலைகுளித்தல் மிகவும் நல்லது. அவ்வாறு தலைகுளிக்கும் நாட்களில் வெயிலில் அலைதல், தயிர், மோர்  சேர்த்த  உணவு, பகல் தூக்கம் ஆகியவற்றைத்  தவிர்க்கவும்.

கோடைகாலத்தில் அதிக அளவில் சுத்தமான நீர் அருந்துதல்  நல்லது. (குறைந்தது 3லிட்டர் முதல் 4லிட்டர் வரை).  நீரில் வெட்டிவேர் அல்லது விலாமிச்சை வேர் போட்டு ஊற வைத்த நீர்  உடல் குளிர்ச்சிக்கு இதமானது. உடலை குளிர்ச்சியாக வைதிருக்க உதவும்.. சீரகம் போட்டு கொதிக்க வைத்து ஆறிய நீரும் உடலுக்கு  மிகவும் நல்லது.மண்பானை  நீர், நன்னாரி வேர் போட்டு ஊறிய நீர்  அருந்துவதும் நல்லது.

நமது முன்னோர்களின் காலை உணவான பழையசாதம்  (ஐஸ் பிரியாணி) சாப்பிடுவது உடல் குளிர்ச்சியை  உண்டு பண்ணும். அதன் மூலம் கிடைக்கும் நீராகாரம் உடலுக்கு மிக நல்லது.  அதுபோல  பானகமும் உடல் சூட்டை குறைக்கும். எளிதில் கிடைப்பது நீர்மோர். மோரில் கறி வேப்பிலை, கொத்துமல்லி  தழை,சீரகம், பெருங்காயம், இஞ்சி கலந்து குடிப்பது இன்னமும் நல்ல பலன்களைத் தரும்.

அதிக உடல் சூடு உடையவர்கள் இளநீர் அருந்துவது மிகவும் பயனுள்ளது. அதிலுள்ள  உயிர்ச்சத்துக்கள் கோடைகால நீர்ச்சத்து குறைபாட்டைச் சரி செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது.

கிர்ணி பழம் மற்றும் தர்பூசணி பழத்தில் உள்ள நீர் நீர் வேட்கையை குறைக்கும். அதைப்போன்று  நுங்கும் மிக நல்லது.

மாதுளம்பழம்,  மலைநெல்லி எனப்படும் பெரிய நெல்லிக்காயும் உடலுக்கு மகத்தானது.. ஆரஞ்சு, எலுமிச்சை பழச்சாறும் அடிக்கடி அருந்துவது  உடல் சூட்டை குறைக்கும்.. உடலுக்கு  புத்துணர்ச்சி  ஏற்படுவதோடு தோல் பளபளப்பாகவும் மாறும்.

வெயிலினால் உருவாகும் வேர்குரு பாதிப்பை தவிர்க்க சந்தனக் கட்டையை சிறிது நீர் விட்டு உரசி தடவலாம்.. இதன் காரணமாக வேர்குருவின் பாதிப்பு தவிர்க்கப்படுவதோடு உடலும் மணமணக்கும்.

முகத்தில் உருவாகும் பருக்கள், கொப்புளங்கள் போன்றவற்றில் இருந்து பாதுகாக்க, பால்சங்கை பன்னீரில் உரைத்து தடவினால், பருக்கள் காணாமல் போகும்..

பாதவெடிப்பு பிரச்சினை உள்ளவர்கள், வெங்காயத்தை வதக்கி, பின்னர் அதை விழுதுவாக அரைத்து பாதங்களில் தடவி வந்தால் பாத வெடிப்பு படிப்படியாக மறையும்.

உடம்பில் இருந்து அதிகமாக வெளியேறும் வியர்வை வெளியேறுவதைத் தடுத்தால் வேர்க்குருவைக் கட்டுப்படுத்தலாம்.  பொதுவாக பெரும்பாலோர் வியர்க்கும்போது சென்று குளிப்பது வழக்கம். இது தவிர்க்கப்பட வேண்டும்… வியர்வை நின்ற பிறகே குளிக்க வேண்டும்.

முக்கியமாக எண்ணெயில்,  வறுத்து பொரித்து உண்ணும் உணவை தவிர்ப்பது அவசியம்… குறிப்பாக பிராய்லர் சிக்கன், இறால், நண்டு போன்ற உணவுகளுக்கு உடல் சூட்டை அதிகப்படுத்தும் குணம் இருப்பதால், அதை கண்டிப்பாக தவிர்ப்பது நலம்தரும்…

அதுபோல உடம்பில் வெயில் படாமல்  பார்த்துக் கொள்வது நலம்…  தலைக்கு குடையும், கண்ணுக்கு கண்ணாடியும், காலுக்கு செருப்பும் அவசியமாகும்.

வேலைக்கு செல்லும் பெண்களே… உங்களுக்கான டிப்ஸ்  இதோ…

வெயிலின் தாக்கத்தால் உங்கள் அழகான முகம் கறுத்து விடும் எண்ணும் இந்த கால யுவதிகளே…. உங்கள் அழகை பாதுகாக்க சில சம்மர் டிப்ஸ்…

வெயிலில் டூவீலரில் போகும் பெண்கள் தலையில் பேண்டோ அல்லது ஸ்கார்ஃப் அணிவது வெயிலிலிருந்தும் உங்கள் சருமத்தை காப்பாற்றும்… அதுபோல  வெளியில் போவதற்கு முன்னால் முகத்தில் சன்ஸ்க்ரீன் ஞாபகமாகத் தடவவும். மாய்சரைஸர் தடவிய பிறகே சன்ஸ்க்ரீன் போட்டால் சருமத்திற்கு நல்லது.

பொதுவாக காட்டன் உடைகளையே அணிவதே சிறந்தது.  சின்தடிக் ஆடைகள் கோடையைக் கடுமையாக்கும். அதை தவிர்ப்பது நலம்.

வெயிலின் தாக்கத்தால், வியர்வை வழிந்துகொட்டும் என்பதால் மேக்கப்பில் கவனம் தேவை. லிக்விட் ஐ – லைனருக்குப் பதில் வாட்டர் ப்ரூஃப் மஸ்காரா அல்லது ஐபென்சில் உபயோகிப்பது சிறந்தது.

அதையும் மீற உங்கள் உடலில் வெயிலினால் கருமை படிந்தால், தயிரில் வெள்ளரி ஜூஸ், மஞ்சள் பொடி கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவினால் முகம் பளிச்சென்று பளபளக்கும்…

* கைகள் கறுப்பாகிவிட்டதே என கஷ்டப்படாமல் சன்ஃபிளவர் ஆயிலில் கொஞ்சம் எலுமிச்சை ஜூஸ், கொஞ்சம் சர்க்கரை சேர்த்துத் தடவி சிறிது நேரம் கழித்து வாஷ் பண்ணினால் கைகள் பளபளக்கும்.

* கோடை நாட்களில் கூட குளிக்கும் தண்ணீர் பாடி டெம்பரேச்சரில் இருப்பது நன்று. தண்ணீரில் பாத் சால்ட், புதினா, வெள்ளரி வில்லகள், எலுமிச்சை ரசம்…..  என போட்டுக் குளித்தீர்களானால் நறுமணமும் புத்துணர்ச்சியும் கிட்டும்.

இவற்றை எல்லாம் உணவில் அதிகம் சேர்த்து இக்கோடையை குதூகலாமாக கொண்டாடுவோம். வாசகர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி செயல்பட்டால், அக்னி வெயில் உங்களை அண்டாது.