பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்த வால்பாறைக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பி கொண்டிருந்த வேன் கவிழ்ந்த விபத்தில், அந்த  வாகனத்தில் பயணித்த  7 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.

கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த 13 பேர் நேற்று வால்பாறைக்கு சுற்றுலா வந்தனர். வால்பாறையை சுற்றிப் பார்த்துவிட்டு  நேற்று (ஏப்ரல் 17)  மாலை பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு மீண்டும் புறப்பட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக வால்பாறை மலைப்பாதையில் உள்ள 13-வது கொண்டு ஊசி வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் அங்கிருந்த தடுப்பு சுவரில் மோதியது. இதில் வாகனம் 800 அடிக்கு கீழாக சாலையில் தலைகுப்புற விழுந்து நொறுங்கியது.

இந்த கோர விபத்தில்,  வாகனத்தில் பயணம் செய்த 7 பெண்கள், 2 ஆண்கள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

விசாரணையில் வாகனத்தில் சுற்றுலா வந்தவர்கள்,  கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெருந்தல்மன்னா தளிபரம்பில் உள்ள ஒரு தனியார் பள்ளியை சேர்ந்த ஆசிரியைகள் மற்றும் ஊழியர்கள்  என்பது தெரிய வந்தது. இந்த வேனை டிரைவர் முகமது பஷீத் என்பவர் ஓட்டி வந்தார். இவர்கள் திரும்போது அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது.

இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு குழுவினர் உருக்குலைந்த வேனில் சிக்கியவர்களையும், சாலையில் பலத்த காயத்துடன் சிதறி கிடந்தவர்களையும் பொதுமக்கள் உதவியுடன், கிரேன் மூலமாக மீட்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர்.

இதில் 9 பேர் பலியான நிலையல், டிரைவர் முகமதுபஷீர் (21) மற்றும் வேனில் பயணம் செய்த நெளஷாத் (39),ஷஹாதீன்(11), மஸ்னீன்(10) ஆகியோர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இந்த கோர விபத்து குறித்து கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். விவபத்து தொடர்பாக பேசிய அவர், “மாலை ஐந்து மணியளவில் வால்பாறை சாலை 13-வது கொண்டை ஊசி வளைவில் KL 12 AM 7288 எண் கொண்ட கேரள சுற்றுலா வாகனம் விபத்தில் சிக்கியது. இந்த வாகனத்தில் 8 பெண்கள் 5 ஆண்கள் என 13 பேர் பயணித்துள்ளனர். விபத்து தொடர்பாக தவல் அறிந்ததும் தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினர் விரைந்து சென்று மீட்பு பணியை துவங்கினர். பாதிக்கப்பட்டவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டனர்.

இந்த விபத்தில் 7 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். மூன்று பேர் கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஒரு சிறுமி பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நல்ல முறையில் பேசுகிறார். இந்த விபத்து தொடர்பாக கேரளா மாநிலம் மலப்புரம், பாலக்காடு மாவட்ட ஆட்சியரோடு தொடர்பில் இருக்கிறோம். விரைவில் உடற்கூராய்வு பணிகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.