மதுரை:

ந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி ஒரு பெண்மணி தன் இரு குழந்தைகளுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றது  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இன்று மதியம் திவ்யா என்ற பெண் இரண்டு குழந்தைகள் மற்றும் மூன்று பெண்களுடன்  ஆட்சியர் அலுவலலகத்துக்கு வந்திருந்தார். அப்போது, திடீரென குழந்தைகள் மீதும் தன் மீதும் மண்ணெண்ணெய் ஊறிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

அங்கிருந்த காவல்துறையினர் பாய்ந்துவந்து அவர்களைத் தடுத்துக்  காப்பாற்றினர். இந்தச் சம்பவம்,  அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட திவ்யா. “மதுரை ஒத்தக்கடை முத்துசாமிபுரத்தில் வசித்துவருகிறோம். ஐந்து மாதங்களுக்கு முன், என் கணவர் உடல் நலக்குறைவால்  மரணமடைந்துவிட்டார். அதன் பிறகு  குடும்பத்தை நடத்த சிரமப்படுகிறோம். இந்த நிலையில், நாங்கள் குடியிருக்கும் வீட்டை அபகரிக்க அப்பகுதி ரவுடிகள் பிரபாகரன், சேகர் ஆகியோர் முயல்கிறார்கள். எங்களை  ஊரைவிட்டு துரத்தும் எண்ணத்தில்  மிரட்டுகிறார்கள்.

எங்கள் குடும்பத்தைப் பற்றி அவதூறு பரப்பினார்கள். என் அத்தை கஞ்சா விற்பதாகப் பொய்ப் புகார் கொடுத்து, அவரை சிறைக்கு அனுப்பினார்கள்.

தற்போது, எங்களை ஊர்விலக்கம் செய்துவிட்டார்கள்.  பொதுக்குழாயில் நாங்கள் தண்ணீர் பிடிக்க்கூடாது என தடுக்கிறார்கள். இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும்  எந்த நடவடிக்கையும் இல்லை.

தற்போது அந்த ரவுடிகள் புகார் கொடுத்ததை வாபஸ் வாங்கு என்று இப்போது மிரட்டுகிறார்கள். அதனால், வேறு வழியில்லாமல் தற்கொலைசெய்துகொள்ள முடிவுசெய்தோம்” என்றார்.

தற்போது, இந்த விவகாரம் குறித்து அதிகாரிகள் விசாரித்துவருகிறார்கள். இன்று போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர்,  மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடத்திக்கொண்டிருக்கும்போது நடந்த இந்த தீக்குளிப்பு முயற்சி  சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.