இந்தியாவின் ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு வழங்கியதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO – டிஆர்டிஓ) விஞ்ஞானி பிரதீப் எம் குருல்கர் கடந்த வெள்ளியன்று மும்பையில் கைது செய்யப்பட்டார்.

“விஞ்ஞானி முக்கியமான தகவல்களை கசியவிட்டதாக எங்கள் விசாரணை நிரூபித்ததை அடுத்து, ஆய்வக இயக்குனர் பதவியில் இருந்து விஞ்ஞானி நீக்கப்பட்டுள்ளார்” என்று DRDO அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் உளவாளிகளுக்கு தகவல் கசிந்த விவகாரத்தில் விசாரணைக்கு பிறகு டிஆர்டிஓ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

2022 முதல் குருல்கர் பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்தார். குருல்கரை புனேவில் இருந்து மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்புப் பிரிவினர் (ஏடிஎஸ்) அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

பாகிஸ்தானின் பெண் உளவுத்துறை ஏஜென்ட்டுடன் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்ட குருல்கர், அந்தப் பெண்ணுடன் தொடர்ந்து வாட்ஸ்அப் செய்திகள் மற்றும் வீடியோ அழைப்புகள் மூலம் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது.

விசாரணையின் போது, ​​குருல்கர் அந்த பெண்ணுடன் ஹனிட்ராப்பில் மாட்டிக் கொண்டு ரகசிய தகவல்களை வெளியிட்டது தெரியவந்துள்ளது தவிர வீடியோ சாட் செய்ததை குருல்கர் ஒப்புக்கொண்டதாக ஏடிஎஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். இதனையடுத்து நீதிமன்றம் விஞ்ஞானியை மே 9 வரை ஏடிஎஸ் காவலில் வைக்க உத்தரவிட்டது.

ஒரு பொறுப்பான பதவியில் இருந்தும், DRDO அதிகாரி தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தினார் மற்றும் முக்கியமான தகவல்களைக் கசியவிட்டதன் மூலம் நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்துள்ளார் என்று தீவிரவாத தடுப்புப் பிரிவினர் கூறியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.