டாக்கா:

ந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சில நாட்கள் வங்கதேசத்தில் தங்கினால், எங்கள் நாட்டில் உள்ள  மதநல்லிணக்கத்தை காணலாம் என வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமன் தெரிவித்து உள்ளார்.

குடியுரிமை திருத்த மசோதா, பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இதில், அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசங்களைச் சேர்ந்த இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு அண்டை நாடான பாகிஸ்தான் ஏற்கெனவே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், வங்கதேசமும் தற்போது தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது. வங்கதேச ஊடகம் ஒன்றில் பேசியுள்ள அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமன்  வங்கதேசத்தில் இந்துக்கள் துன்புறுத்தப்படுவதாக அமித்ஷா கூறியது தேவையற்றது மற்றும் உண்மையற்றது என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

மத நல்லிணக்கம் சிறப்பாக  கடைபிடிக்கப்படும் சில நாடுகளில் வங்கதேசமும் ஒன்று என்று கூறியவர்,  இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வங்கதேசத்திற்கு வந்து சில மாதங்கள் தங்கியிருந்தால்,  இங்கு  மத நல்லிணக்கம் முன்னுதாரணமாக இருப்பதை காண முடியும் என்று தெரிவித்தார்.

மேலும், எங்கள் நாட்டில் சிறுபான்மையினர்கள் என யாரும் இல்லை. அனைவருமே சமமான வர்கள்தான் என்றும்,  எங்களை பற்றி அவர்கள் கவலைப்பட தேவையில்லை. நட்பு நாடு என்ற முறையில், எங்களுடனான நட்புறவை பாதிக்கும் வகையிலான எந்த செயல்பாட்டையும் இந்தியா மேற்கொள்ளாது என நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.