லண்டன்:

பிரிட்டனில் இன்று பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் கட்சி ஆட்சி அமைக்கும். போரிஸ் ஜான்சன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பார் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. சில கருத்துக்கணிப்புங்கள் அங்கு தொங்கு பாராளுமன்றம் அமையும் என்றும் தெரிவிக்கின்றன.

இந்தியாவைப் போன்ற நாடாளுமன்றத்தை  கொண்டுள்ள பிரிட்டனில், HOUSE OF COMMONS எனப்படும் மக்களவையும் மற்றும் HOUSE OF LORDS எனப்படும் பிரபுக்கள் அவையும் உள்ளது. இதில், HOUSE OF COMMONS எனப்படும் மக்களவைக்கு பொதுமக்கள் வாக்களிப்பதின் மூலம் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். HOUSE OF LORDS எனப்படும் பிரபுக்கள் சபைக்கு (மாநிலங்களவை போன்றது) உறுப்பினர்கள் பிரதமரின் பரிந்துரையை ஏற்று, நாட்டின் மகாராணி நியமனம்  செய்து உத்தரவிடுவது வழக்கம். இந்தியாவைப் போல அங்கும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், இன்று அங்கு HOUSE OF COMMONS எனப்படும் மக்களவை தொகுதிகளான 650 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் முக்கிய விவகாரமாக பிரெக்சிட் விவகாரம் எழுப்பப்பட்டு உள்ளது.

முன்னாள் பிரதமர் தெரசா மே, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறும் பிரெக்சிட்  ஒப்பந்தம் செய்ததுற்கு  எதிர்ப்பு தெரிவித்து பல மந்திரிகள் ராஜினாமா செய்ததால், அவர் தனது பதவியை கடந்த ஜூலை மாதம்  24ந்தேதி ராஜினாமா செய்தார். அதையடுத்து, போரிஸ் ஜான்சன் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

பிரெக்சிட்  ஒப்பந்தத்துக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்க மறுத்து விட்டதால், அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று தேர்தல் நடைபெறுகிறது.

பிரிட்டன் நேரப்படி காலை  7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி இரவு 10 மணி வரை நடைபெறும்.  இந்த தேர்தலில்,  இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து உள்பட  650 பாராளுமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி, நாளை காலை முடிவுகள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முடிவுகள் அனைத்தும் வெளியான பின்னர், வெற்றி பெற்ற கட்சியின் தலைவர் பக்கிங்காம் அரண்மனையில் ராணியைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர வேண்டும்.

இந்த தேர்தலில் பிரதானமான கட்சிகளான கன்சர்வேடிவ், லேபர் ஆகிய கட்சிகளிடையே நேரடி போட்டி நிலவுகிறது.  போரிஸ்ஜான்சன் அங்குள்ள இந்திய வம்சாவழியினர் ஆதரவை பெறும் வகையில், சமீபத்தில் அங்குள்ள சுவாமி நாராயண் கோயிலுக்கு தனது மனைவியுடன் சென்று பிரார்த்தனை செய்த நிலையில், மோடிக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்திருந்தார்.

அதுபோல, அங்கு வெளியாகி உள்ள கருத்துக்கணிப்பிலும் போரிஸ் ஜான்சனுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சில கருத்துக்கணிப்புகள் அங்கு தொங்கு பாராளு மன்றம் அமைய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், இன்று அங்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அடுத்த பிரதமராக வரப்போவது யார் என்பது உலக நாடுகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.