மீரட்

ஸ்ரீ ஆயுட்சண்டி மகாயக்ஞ சமிதி என்னும் இந்து அமைப்பு மாசு தடுப்புக்காக 500 குவிண்டால் எடையுள்ள மாமரக்கட்டைகளை எரிக்க உள்ளது.

காற்று மாசாவது உலகப் பிரச்னை ஆகி வருகிறது.   ஓஸோன் மண்டலம் பாதிப்படைந்துள்ளதால் உலகம் வெப்ப மயம் ஆகி வருகிறது.   ஓஸோன் மண்டலம் பாதிப்பை குறைக்கவும் காற்று மாசுபடுவதை தடுக்கவும் உலகெங்கும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.   அவற்றில் முக்கியமானது மரம் வளர்த்தல் ஆகும்.   ஆனால் அதற்கு நேர்மாறான கருத்து ஒன்றை மீரட்டில் உள்ள இந்து அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள இந்து அமைப்பு ஸ்ரீ ஆயுட்சண்டி மகாயக்ஞ சமிதி.   இந்த அமைப்பின் சார்பில் மாசு தடுப்புக்காக ஒரு யாகம் ஒன்று நடைபெற உள்ளது.  இதற்காக மீரட் நகரில் உள்ள பைன்சாலி மைதானத்தில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.   வரும் 18ஆம் தேதி தொடங்க உள்ள இந்த ஹோமம் 9 நாட்கள் நடைபெற உள்ளது.   இதற்காக 125 அடிக்கு 125 அடியில் ஒரு ஹோம குண்டம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பின் துணை தலைவர் கிரிஷ் பன்சால்,”இந்து மத தத்துவங்களின் படி யாகங்கள் மூலம் சுற்றுச்சூழல் சுத்தமாகி மாசு படுவது குறையும் என ஒரு நம்பிக்கை உள்ளது.    மாமரக்கட்டைகளை சுத்தமான பசு நெய் ஊற்றி யாகத்தில் எரிப்பதினால்  காற்று மாசடைவது குறையும்.   இதற்காக எந்த ஆய்வும் நடத்தப்படாததால் இந்த விஞ்ஞான உண்மை பலராலும் அறியப்படவில்லை.     இதற்காக பழைய பட்டுப்போன மாமரக்கட்டைகள் மட்டுமே உபயோகப்படுத்த உள்ளன.   இதன் மூலம் ஓஸோன் மண்டலம் பாதிப்படைவது முழுவதுமாக நின்று போகும்”  என தெரிவித்துள்ளார்.

இந்த யாகத்தில் 350 வேத விற்பன்னர்கள் கலந்துக் கொள்ள உள்ளனர்.   யாகத்துக்காக 500 குவிண்டால் எடையுள்ள மாமரக் கட்டைகள் தயார் நிலையில் உள்ளன.  ஒரு குவிண்டால் என்பது 100 கிலோ ஆகும்.    ஆனால் இந்த அமைப்பின் கருத்தை மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மறுத்துள்ளது.  வாரிய தலைவர் தியாகி, “மரக்கட்டைகளை எரிப்பதால் காற்று மேலும் மாசுபடும்.   ஆனால் இவை மத நம்பிக்கைக்களுடன் நடப்பதால் சட்டப்படி இதை எங்களால் எதிர்க்க முடியாத நிலையில் இருக்கிறோம்” என கூறி உள்ளார்.