டில்லி

ற்போது எதிர்கட்சியினருடன் பேச அரசு ஊழியர்கள் பயப்படுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான ப சிதம்பரம் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.   அப்போது அவர் முந்தைய வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசையும் தற்போதைய மோடி தலைமையிலான பாஜக அரசையும் ஒப்பிட்டு பேசி உள்ளார்.

ப.  சிதம்பரம், “தற்போதுள்ள நிலையில் எதிர்க்கட்சியினர் தங்களின் கருத்துக்களை பாராளுமன்ற விவாதங்களில் மட்டுமே சொல்லும் நிலை உள்ளது.    ஆனால் இந்த அரசு பாராளுமன்றத்தில் விவாதங்கள் நடக்க விடாமல் செய்து வருகிறது.   அதனால் என்னைப் பொறுத்தவரை எதிர்க்கட்சியினர் தங்கள் கருத்துக்களை பத்திரிகையாளரிடம் மட்டுமே கருத்துக்களை தெரிவிக்க முடிகிறது.

முந்தைய வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் எங்களால் அமைச்சர்களிடம் பேச முடியவிலை என்றால் அரசு ஊழியர்களிடம் பேச முடிந்தது.   அதனால் எங்கள் கருத்துக்கள் அமைச்சரவைக்கு இந்த ஊழியர்கள் மூலமாவது போய் சேர்ந்தது.   ஆனால் தற்போது அரசு ஊழியர்கள் யாரும் எதிர்கட்சியினருடன் பேசுவதில்லை.    சொல்லப்போனால் எதிர்க்கட்சியினருடன் பேசவே அவர்கள்  பயப்படுகின்றனர்.  அப்படி இருக்க எங்களால் எப்படி எங்கள் கருத்தை அரசுக்கு அறிவிக்க முடியும் என தெரியவில்லை.

வர வர கருத்து சுதந்திரம் என்பது குறைந்துக் கொண்டே வருகிறது.   இது இப்படியே தொடருமானால் ஒரு நாள் நீங்கள் ஏதாவது பேச எண்ணினாலும் உங்களுக்கு  பேச குரல் எழும்பாமல் போய் விடக் கூடும்.   இன்று நாட்டுக்கு தேவை வேற்றுமையோ தாராளமயமோ இல்லை.   கருத்து சுதந்திரம் மட்டுமே அவசியத் தேவை”  என கூறினார்.