இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது.

கடந்த ஒரு மாதமாக பெய்துவரும் கனமழையால் பியாஸ் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் நிலங்கள் தவிர மனித உயிர்களும் ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்டது.

தொடர் நிலச்சரிவு காரணமாக இங்கு வாழும் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

ஏறத்தாழ 2000 சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளது மேலும் அரசு மற்றும் தனியார் சொத்துக்கள் கணிசமான இழப்பை சந்தித்துள்ளதால் நிலைமை மோசமாக உள்ளது.

மாநிலத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில், 10,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

இந்தச் சூழ்நிலையில் நமது மாநில மக்களுக்கு விரைவான நிவாரணம் மற்றும் மறுவாழ்வு வழங்க மாநில பேரிடர் மீட்பு நிதி (SDRF) போதுமானதாக இருக்காது. மக்களின் நீண்டகால மறுவாழ்வுக்குத் தேவையான நிதியை தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து ஒதுக்க வேண்டும்.

ஹிமாச்சல் பிரதேசத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று ஹிம்லோக் ஜாக்ரிதி மஞ்சின் நேகி; இமயமலை பச்சாவ் சமிதி கம்லாவின் குல்பூஷன் உப்மன்யு, சம்பா; இமயமலை நித்தி அபியானின் குமன் சிங்; தீபக் குப்தா, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி; விப்லோவ் தாக்கூர், முன்னாள் எம்.பி. ஆகியோர் உள்ளிட்ட சிவில் சமூக அமைப்புகள் தவிர சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது தொடர்பாக மத்திய அரசுக்கு இவர்கள் கூட்டாக கையெழுத்திட்ட கடிதத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளனர்.

அரிதான இந்த பேரழிவை சமாளிக்க இமாச்சலப் பிரதேசம் மத்திய அரசின் எந்தவிதமான உதவியும் இன்றி போராடி வருகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் பேரழிவுகளின் தீவிரமும் அளவும் மாநில அரசாங்கத்தின் திறனை விட அதிகமாக இருப்பதாக 89 அமைப்புகள் மற்றும் சில தனி நபர்கள் கையெழுத்திட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

ஜூன் மாதம் முதல் பெய்து வரும் மழைக்கு இமாச்சல பிரதேச மாநிலத்தில் இதுவரை 113 நிலச்சரிவு சம்பவங்கள் மற்றும் 58 வெள்ளப்பெருக்கு சம்பவங்களில் மொத்தம் 327 பேர் உயிரிழந்துள்ளனர். இயற்கை பேரிடர் தொடர்பான சம்பவங்களில் 38 பேர் காணாமல் போயுள்ளனர்.