சிம்லா: இந்தியாவின் மலை மாநிலங்களில் ஒன்றான இமாச்சலப் பிரதேசத்தில், கொரோனா ஊரடங்கு, ஜுன் 30ம் தேதி வரை நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்மாநிலத்தில் இதுவரை 214 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து பேர் பலியாகியுள்ளனர். 63 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக, ஹமிர்பூரில் 63 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. (ஒப்பீட்டளவில் இந்த பாதிப்பு குறைவுதான் என்பது குறிப்பிடத்தக்கது.)
மத்திய அரசு அறிவித்த நான்காம் கட்ட ஊரடங்கு, வரும் 31ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், ஊரடங்கை, மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டித்து முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் உத்தரவிட்டார்.
இதன்படி, அடுத்த மாதம் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை தளர்த்தினால், வைரஸ் தொற்று சமூகப் பரவலாக மாறிவிடும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளதால், ஊரடங்கை நீட்டித்துள்ளதாக மாநில அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.