வாஷிங்டன்,
ஹிலாரி வெற்றிபெற்ற மாகாணங்களில் கள்ள ஓட்டு போடப்பட்டுள்ளது என்று டொனல்டு டிரம்ப் அதிரடி புகார் கூறி உள்ளார். இது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இப்போது அதிபராக உள்ள பராக் ஒபாமாவின் பதவிக் காலம் இந்த ஆண்டுடன் முடிகிறது.
trumpvshillary
அடுத்த அதிபருக்கான தேர்தல்  வாக்கு பதிவு நவம்பர் 8ந்தேதி  நடைபெற்றது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக பிரபல தொழிலதிபர் டொனால்டு டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் கிளின்டனின் மனைவி ஹிலாரி கிளின்டனும் போட்டியிட்டனர்.
இதில் டொனால்டு டிரம்ப் வெற்றிபெற்றார். அவர் வரும் ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ளார்.
தற்போது, டொனால்டு டிரம்ப் அடுத்த ஆண்டு அமைக்கப்போகும் அமைச்சரவைக்கு தகுதியான அமைச்சர்களை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
 
இந்நிலையில், பென்சில்வேனியா, விஸ்கான்சின், மிக்சிகன் மாகாணங்களில், ஓட்டு எண்ணிக்கையில் மோசடி நடந்ததாக, ஹிலாரி ஆதரவாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, விஸ்கான்சின் மாகாணத்தில், மறு ஓட்டு எண்ணிக்கைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஆனால், டிரம்போ,   ‘அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்து விட்டது; மக்கள் தீர்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும்’ என கூறினார்.  மேலும் தேர்தலில் ஹிலாரி தில்லுமுல்லு வேலை செய்தார் என்று  கூறியுள்ளார்.
சில மாகானங்களின் தான் தோல்வி அடைந்ததற்கு கள்ள ஓட்டே காரணம் என டிரம்ப் அதிரடி குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
தேர்தலில் ஹிலாரிக்கு ஆதரவாக, வெர்ஜினியா, நியூஹேம்ஷியர், கலிபோர்னியா மாகாணங்களில், கள்ள ஓட்டுகள் போடப்பட்டு உள்ளன. அதனால தான், அந்த மாகாணங்களில் நான் தோல்வியடைந்தேன் என்று கூறி உள்ளார்.
அந்த மாகாணங்களிலும்  எனக்கு வெற்றி கிடைத்திருந்தால், அதிபர் தேர்தலில் இதுவரை யாரும் பெறாத அளவு, மாபெரும் வெற்றி பெற்றிருப்பேன்; விசாரணை நடத்தினால், உண்மை வெளிவரும் என்றார்.
இதுபற்றி ஊடகங்கள் செய்தி வெளியிட தயங்குகின்றன. ஹிலாரிக்கு ஆதரவாக ஊடகங்கள் செயல்படுகின்றன என்ற குற்றச்சாட்டையும் கூறினார்.
டிரம்பின் புகார் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.