சென்னை: நெடுஞ்சாலை முறைகேடு தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடிக்கு எதிராக,  திமுக சார்பில், ஆர்.எஸ்.பாரதி தரப்பில் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த வழக்கில் புதிய விசாரணை தேவையில்லை என தெரிவித்து உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்தவர் அப்போதைய முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி.  அப்போது நெடுஞ்சாலை துறைக்கான டெண்டர் பெறப்பட்ட விவகாரத்தில் சுமார் 4,800 கோடி அளவுக்கு ஊழல் செய்ததாக புகார் எழுந்தது. இது குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தாக்கல் செய்த நிலையில், உச்சநீதிமன்றம் அந்த வழக்கை ரத்து செய்தது. பின்னர் மீண்டும் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க அனுமதி அளித்தது.

இதையடுத்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி டெண்டரில் முறைகேடு இல்லை என நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால்,  ஆட்சி மாறியதும், லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரின்  அறிக்கையை  லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையர் ஏற்கவில்லை என கூறப்பட்டது. அதனால்,மீண்டும் விசாரணை நடத்த உள்ளதாக இந்த வழக்கின் விசாரணையின்போது தமிழ்நாடு அரசு தெரிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி,  லஞ்ச ஒழிப்பு துறையின் ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று வாதிடப்பட்ட நிலையில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் முடிவை ஒத்தி வைத்தார்.

இநத் நிலையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஆட்சி மாற்றம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் புதிய விசாரணை தேவையில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

உயர்நீதிமன்றத்தின் உத்தரவு திமுகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.