சென்னை: செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலை யில்,  உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக அமைச்சர் செந்தில்பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

அமைச்சர் செந்தில்பாலாஜி வீடுகளில் அமலாக்கத்துறை சோதனையை செய்துவிட்டு, அவரிடம் விசாரணை நடத்தியது. அதையடுத்து இரவில் அவரை கைது செய்தது. இதை யடுத்து, செந்தில் பாலாஜி நெஞ்சுவலிப்பதாக கூறி மருத்துவமனையில் சேர்ந்தார். செந்தில் பாலாஜி  கைது செய்யப்பட்டதை எதிர்த்து, அவரது மனைவி மேகலா  சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதை  சென்னை உயர் நீதிமன்றம் ஏற்று விசாரணை நடத்தியது. இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகளின் தீர்ப்பில், முரண் ஏற்பட்டது. செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும், கைது நடவடிக்கை சட்டவிரோதம் இல்லை என முன்னதாக, ஆட்கொணர்வு மனுவில் நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி இருவேறு தீர்ப்புகளை வழங்கியிருந்தனர்

இதையடுத்து, 3வது நீதிபதி மீண்டும் வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில், செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டது செல்லும் என்றும் கூறினார். இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செந்தில் பாலாஜி நேற்று இரவு (17/07/23) பழல் சிறைக்கு மாற்றப்பட்டார். அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில்,  அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.  அதில், செந்தில்பாலாஜி மனைவி தொடர்ந்து, “ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது சரியானது அல்ல. ஒருவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும்போது இதுபோன்ற மனுவை பரிசீலிப்பதே தவறு. இது ஒரு தவறான முன்னுதாரணமாகிவிடும். செந்தில்பாலாஜியை தனியார் மருத்துவமனையில் சேர்க்க அனுமதி அளித்ததும் ஏற்கத்தக்கதல்ல. செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று வாதிட்டார்.

இந்த நிலையில், செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.