அதிக கட்டணம்: தனியார் பேருந்துகளுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை!

சென்னை,

பொங்கல் பண்டிகையையொட்டி  தனியார் பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து நேற்று முதல் பேருந்து போக்குவரத்து சீராக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கு பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

இந்நிலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு மாற்று வழிகளை   கூறி உள்ள நிலையிலும் நேற்று இரவு கோயம்பேடு  பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பேருந்துகள் பஸ் நிலையம்   உள்ளே வரவும், வெளியே செல்லவும் நீண்ட நேரம் ஆனது. மற்றொருபுறம் எந்தப் பேருந்து எங்கே வரும், எங்கே நிற்கிறது என்ற விவரம் தெரியாமல் பயணிகளும் அல்லாடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு அமைச்சர் விஜயபாஸ்கர்  கோயம்பேடு பேருந்து நிலையம் வந்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து பேருந்து நிலையம் வெளியே வந்து போலீசாருடன் சேர்ந்து போக்குவரத்து சீர் செய்யப்படுவதை பார்வையிட்டார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பண்டிகை காலங்களில் தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வருகின்றன. தனியார் பேருந்துகள்  அதிக கட்டணம்  வசூலித்தது தொடர்பாக  ஆதாரம் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும், பொங்கல் பண்டிகை காரணமாக இந்த இரண்டு நாளில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சென்னையில் இருந்து வெளியூருக்கு பயணமாகி உள்ளார்கள் என்றும் கூறினார்.

Tags: Higher Ticket fees:TN Transport Minister warns to the OMNI buses, அதிக கட்டணம்: தனியார் பேருந்துகளுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை!