பொங்கல் பண்டிகை: பேருந்துகள் கிடைக்காமல் பல மணி நேரம் பயணிகள் அவதி

சென்னை,

மிழகத்தில் 8 நாட்கள் நடைபெற்று வந்த போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நேற்று முன்தினம் (11ந்தேதி) மாலை வாபஸ் பெறப்பட்டது.

இந்நிலையில் நேற்று முதல் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பஸ்சுக்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

தமிழகம் முழுவதும்  நேற்று காலை முதல் வழக்கம்போல பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.  நாளை பொங்கல் பண்டிகை கொண்டாட இருப்பதால், சென்னையில் வசித்து வரும் பெரும்பாலான மக்கள் தங்களது சொந்த ஊருக்கு பயணமாவது வாடிக்கை.

இதன் காரணமாக, பொங்கலுக்கு 12 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தி ருந்தது. ஆனால்,  போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, அதற்கான முன்பதிவு செய்வது ரத்து செய்யப்பட்டது. மேலும் பேருந்து இயக்கப்படுமா என்ற கேள்விக்குறியும் எழுந்தது.

இந்நிலையில் நேற்று முதல் மீண்டும் பேருந்துகள், முன்பதிவு இல்லாமல் இயக்கப்பட்டதால், பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக ஆயிரக்கணக்கானோர் தங்களது சொந்த ஊருக்கு செல்ல குடும்பத்தோடு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.

சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ஏற்கனவே  ஏற்கனவே கோயம்பேடு, பூவிருந்த வல்லி, அண்ணா நகர் மேற்கு, சைதாப்பேட்டை மற்றும் தாம்பரம் சானடோரியம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பேருந்துகள் புறப்படும் என்று போக்குவரத்துத் துறை அறிவித்திருந்தது.

இருந்தாலும் நேற்று ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர்  கோயம்பேடு பேருந்து நிலையம் திரண்டதால் அங்கு கூட்டம் அலைமோதியது.

அதுபோல, சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. நேற்று சென்னை யில் இருந்து 7 சிறப்பு ரெயில்கள் பல இடங்களுக்கு இயக்கப்பட்டன. அனைத்து ரெயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

கோயம்பேடு உள்பட வெளியூர் செல்லும் பேருந்து நிலையங்களில் பொதுமக்கள் ஏராளமாக திரண்டதால், பேருந்து நிலையம் மக்கள் கூட்டத்தால் திணறியது. பேருந்துகளை பிடிக்கவும், அதில் ஏறவும் முண்டியடித்து சென்றதால் கடும் நெரிசல் காணப்பட்டது.

தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையிலும், தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை என்பதால், பொதுமக்கள் குடும்பத்தோடு சொந்த ஊருக்கு செல்ல  அதிக அளவு திரண்டனர். இதன் காரணமாக அவர்களுக்கு தேவையான பேருந்துகள் கிடைக்காமல் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது.

நேற்று இரவு கோயம்பேட்டில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டனர்.
English Summary
Pongal Festival: passengers are waiting for buses Many hours at Koaymabedu