கென்னை: தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்காதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதற்கு ஆளுநர் மாளிகை விளக்கம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தொங்கு சட்டமன்றம் அமைந்துள்ள நிலையில், அதிக இடங்களை கைப்பற்றிய தவெக, ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரை இன்று இரண்டாவது முறை சந்தித்து பேசிய நிலையில், அவரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பார் என எதிர்பார்த்த நிலையில், ஆளுநர் மாளிகை விளக்கம் வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ந்தேதி நடைபெற்று மே 4ந்தேதி முடிவுகள் வெளியான நிலையில், எந்தவொரு கட்சிக்கும் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டது. திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினே தோல்வியை சந்தித்து பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து , புதிய அரசை அமைப்பதில் நாளுக்கு நாள் பெரும் பரபரப்பும் அரசியல் நகர்வுகளும் அரங்கேறி வருகின்றன.
இந்தத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை பலமான 118 இடங்களை எட்டுவதில் தவெக-விற்குச் சவாலான சூழல் நிலவுகிறது.
தற்போது காங்கிரஸ் கட்சி த.வெ.க-விற்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அக்கட்சியின் பலம் 112-ஆக உயர்ந்துள்ளது. ஆனாலும், அறுதிப் பெரும்பான்மைக்கு இன்னும் 6 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், மற்ற கட்சிகள் இதுவரை தவெக-விற்குத் தங்களது ஆதரவை உறுதி செய்யவில்லை.
இந்தச் சூழலில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று மாலை ஆளுநர் அர்லேகரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால், பெரும்பான்மைக்குத் தேவையான 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதம் இல்லாத காரணத்தால், ஆளுநர் அவரை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து, இன்று மீண்டும் நீலாங்கரையிலுள்ள தனது இல்லத்திலிருந்து கிண்டி ஆளுநர் மாளிகைக்குச் சென்ற விஜய், ஆளுநரைச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு 40 நிமிடங்கள் நீடித்ததாக கூறப்படுகிறது.
இந்தச் சந்திப்பின்போது, தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என ஆளுநரிடம் விஜய் கோரிக்கை வைத்துள்ளார். மேலும், முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் சட்டசபையில் தனது பெரும்பான்மையை முறையாக நிரூபிப்பேன் என்றும் அவர் ஆளுநரிடம் மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
இருப்பினும், 112 எம்.எல்.ஏ-க்களை மட்டுமே வைத்துள்ள நிலையில், சட்டசபையில் பெரும்பான்மையை எவ்வாறு நிரூபிப்பீர்கள் என்றும், உங்களுக்கு வேறு யார் ஆதரவு அளிப்பார்கள் என்றும் ஆளுநர் அர்லேகர் விஜய்யிடம் சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இறுதியில், பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியதன் அவசியத்தை ஆளுநர் விஜய்க்கு அறிவுறுத்தியதாகத் தெரிகிறது. விஜய்யுடனான இந்த முக்கிய சந்திப்புக்குப் பிறகு ஆளுநர் அடுத்தகட்டமாக என்ன முடிவை எடுக்கப் போகிறார் என்பதை ஒட்டுமொத்த தமிழகமும் உற்று நோக்கி வந்தது.
இந்த நிலையில், விஜயை ஆட்சி அமைக்க ஆளுநர் ஏன் அழைப்பு விடுக்கவில்லை என்று விளக்கம் வெளியிடப் பட்டுள்ளது.
விஜய்க்கு அழைப்பு விடுக்காதது ஏன்? என்பது குறித்து அரசியல் சாசனம், நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டி தமிழ்நாடு ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது. சட்டப்பேரவையில் யார் பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமென ஆளுநர் கருதுகிறாரோ, அவரையே ஆட்சி அமைக்க அழைக்க அரசியல் சாசனம் வழிவகை செய்கிறது என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும், போதுமான பலம் இருப்பதை ஆளுநரிடம் உறுதிப்படுத்த வேண்டும். ஆளுநரின் இந்த முடிவை அரசியல் சாசனப்பிரிவு 361ன் படி எளிதில் கேள்வி கேட்க முடியாது.
அதாவது, மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் சுந்தரேசனிடம் இது தொடர்பாக கருத்து கேட்கப்பட்டதாகவும், அவர் கொடுத்த அறிவுறுத்தலின் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 108 எம்எல்ஏக்கள் உள்ள தனிப்பெரும் கட்சியாக வந்து தவெக ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை என்றும், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவு என கூறி 113 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது தவெக என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அத்துடன், கூட்டணி என குறிப்பிட்டுள்ளதால் 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் கூறி உள்ளதாகவும், தாங்கள் தான் தனிப்பெரும் கட்சி என கூறி ஆட்சி அமைக்க தவெக உரிமை கோரவில்லை என்பதை சுட்டிக்காட்டி உள்ளதுடன், கூட்டணியுடன் வந்துள்ளதால் வேறு எந்த கட்சிகள் தவெகவை ஆதரிக்க உள்ளன என கேட்டுள்ளோம் என்றும், நாங்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் கொடுத்த அறிவுறுத்தலின் பேரில் முடிவு என ராஜ்பவன் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
இதையடுத்து, தவெக தலைவர் தலைவர் விஜய் பட்டினப்பாக்கம் அலுவலகத்தில் சட்ட நிபுணர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தவெக நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ள இந்த ஆலோசனைக் கூட்டமானது, தேர்தலில் அதிக இடங்களைப் பெற்றும் ஆட்சி அமைக்க ஆளுநர் இதுவரை அழைப்பு விடுக்காத சூழலில், அடுத்தகட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க நடைபெற்று வருகிறது.