டில்லி,

திக கட்டணம் வசூலித்துள்ள பள்ளிகளுக்கு கெஜ்ரிவால் அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மாணவர்களிடம் வசூலித்த அதிக கட்டணத்தை திரும்பி கொடுக்க வேண்டும் அல்லது பள்ளிகளை அரசு ஏற்று நடத்த தயங்காது என்று அதிரடியாக அறிவித்து உள்ளார்.

தனியார் பள்ளிகளின் நிர்வாகங்களில் நாங்கள்  “தலையிட” விரும்பவில்லை, ஆனால் தேவைப் பட்டால் பள்ளிகளை ஒழுங்கப்படுத்த தயங்க மாட்டோம் என்றும் கூறினார்.

இதையடுத்து அதிக கட்டணம் வசூலித்ததாக  449 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்ட்டுள்ளது.

கடந்த 4 மாதங்களுக்குப் பிறகு முதன்முறையாக டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது-

தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு  ஆறாவது ஊதிய குழு ஆணையத்தின் பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதற்காக பள்ளி மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து,   நீதிபதி அனில் தேவ் சிங் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது.

அந்த குழுவினால் அடையாளம் காணப்பட்ட 449 பள்ளிகளுக்கு தற்போது நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது..

அந்த பள்ளிகள் கூடுதலாக வசூலித்த கட்டணத்தை திருப்பி செலுத்தவேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் தனியார்  பள்ளிகள் நீதிபதி அனில்தேவ் சிங் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்தா விட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். கடைசி நடவடிக்கையாக விதிமுறைகளை கடைபிடிக்காத அந்த பள்ளிகளை அரசே எடுத்து நடத்தும்.

இவ்வாறு முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து துணைமுதல்வர் மணிஷ் சிசோடியா கூறும்போது, பள்ளிகள் 4 நாட்களுக்குள் நோட்டீசுக்கு பதில் அளிக்க வேண்டும் என்றும், இரண்டு வாரத்திற்குள் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், அரசியல் கட்சியினர்களுடன் உள்ள தொடர்பு காரணமாக மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்து கொள்ளையடிக்க  பள்ளிகளை அனுமதிக்க முடியாது என்று கூறி உள்ளார்.