சென்னை:  சிறை கைதியாக உள்ள செந்தில் பாலாஜிக்கு  ‘ஹை பிரஷர்’ இருப்பதால், சென்னை  ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில்  தொடர் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியலாகி உள்ளது.

சட்டவிரோத பண மாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 5 மாதமாக சிறையில் உள்ள செந்தில்பாலாஜியின் அமைச்சர் பதவியை நீக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்காமல் மக்கள் பணத்தை வீணடித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 15ந்தி (புதன்கிழமை) மாலை தலை சுற்றல் ஏற்பட்டதாக தெரிகிறது.  மேலும், தீவிர தலைவலி, வாந்தி இதையடுத்து, புழல் சிறை மருத்துவர், அவருக்கு முதலுதவி  அளித்தார். ஆனால், அவர் தொடர்ந்து பிரச்சினை இருப்பதாக கூறியதால்,  அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல திட்டமிட்டனர்.

இதைத்தொடர்ந்து, புழல் சிறையில் இருந்து ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அழைத்து செல்லப்பட்டார். சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு  உயர் ரத்த அழுத்தம், பித்தப்பையில் கல் உள்பட பல நோய்கள் இருப்பதால்,  8 கிலோ வரை எடை குறைந்ததாக கூறப்படுகிறது. அவரை உடனடியாக பரிசோதித்த ஸ்டான்லி மருத்துவ சிறப்பு மருத்துவக் குழு, மேல் சிகிச்சைக்காகவும், பாதுகாப்பை கருத்தில் கொண்டும், அன்றிரவே ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்ற பரிந்துரை செய்தனர். இதையடுத்து,  ஓமந்தூரார் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு  இதயவியல் துறையின் கீழ், உள்நோயாளியாக சேர்ககப்பட்டு  6 ஆவது தளத்தில் உள்ள தனி அறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

செந்தில் பாலாஜியின் ரத்த அழுத்ததுக்கு மருந்து மாத்திரைகள் கொடுத்தும்,  சற்றும் குறையாத காரணத்தால் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

முன்னதாக, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 13ஆம் தேதி நள்ளிரவு, அமலாக்கத்துறை யினர் கைது செய்தனர். அப்போதே நெஞ்சில் வலி ஏற்பட்டதாக கூறி காரில் சரிந்த செந்தில் பாலாஜி, உடனடியாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செந்தில் பாலாஜியை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு இதயத்தில் 3 அடைப்பு இருப்பதாக தெரிவித்தனர். இதனை மத்திய அரசின் இ.எஸ்.ஐ. மருத்துவர்களும் உறுதி செய்தனர். உயர்நீதிமன்றத்தின் அனுமதியுடன் காவிரி மருத்துவமனையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து அவ்வப்போது உடல்நிலை  பாதிப்பு என கூறி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்து செல்கிறார்.