திருவனந்தபுரம்: கேரளாவில் பெய்து வரும்  தொடர் கனமழை காரணமாக, 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தென்மேற்கு பருவமழையுடன் மத்திய தெற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையும் சேர்ந்து கொண்டதால் கேரளா முழுவதும் மிக பலத்த மழை பெய்து வருகிறது. அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கூறியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து,  முன்னேற்பாடு பணிகளை கேரள மாநில அரசு முடுக்கிவிட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

கடந்த 2 நாட்களில் பெய்த மழைக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 6 பேர்பலியானார்கள். பத்தினம்திட்டா மாவட்டத்தில் வெண்ணிக்குளம் பகுதியில் சென்ற கார் ஒன்று சாலையோர ஓடையில் கவிழ்ந்தது. இதில் கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. காரில் இருந்த 3பேர் இறந்தனர். இடுக்கி மற்றும் கும்பாவுருட்டு அணை பகுதியிலும் வெள்ளத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். மாநிலம் முழுவதும் மழைக்கு 55 வீடுகள் சேதமடைந்துள்ளது. இதில் 5 வீடுகள் முழுமையாகவும், 500 வீடுகள்பகுதி அளவிலும் சேதம் அடைந்துள்ள தாக வருவாய் துறையினர் தெரிவித்து உள்ளனர். இதற்கிடையே மழைக்கு வீடு இடிந்ததும், வெள்ளத்தில் சிக்கியும் இதுவரை 20 பேர் பலியாகி உள்ளனர். மலையோர மாவட்டங்களில் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

 கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக,  இடுக்கி அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. . தொடர் மழை காரணமாக அங்குள்ள பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக அணைகளுக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்து உள்ளது.இதனால் அணைக்கு நீல நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதன் காரணமாக மொத்தம் உள்ள 14 மாவட்டங்களில் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.மேலும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கி உள்ளது. இதையடுத்து இந்த பகுதிகளில் வசித்தவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்காக மாநிலம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.